காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது: மத்திய அரசு மீண்டும் வாதம்

cauveryடெல்லி: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், விவாதம் நடைபெற்றது.

வாதத்தை முன் வைத்த மத்திய அரசின், ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசுக்கு மட்டுமே உரிமையுள்ளதாக அவர் வாதிட்டார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இரு நாட்களாக, திமுக உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரால், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், மத்திய அரசு, தனது பழைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றமே முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டும், முதலில் அதை ஏற்ற மத்திய அரசு 3 நாளில், பல்டியடித்து, மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இப்போது மீண்டும் அதே பல்லவியை மத்திய அரசு பாடியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: