போர்க்களமான தமிழக ரயில்வே தண்டவாளங்கள்… பாடம் கற்குமா முதுகில் குத்திய மத்திய அரசு?

rail-rokoசென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் தொடர்ச்சியான துரோகங்களால் கொதித்துப் போன தமிழகம் தம்முடைய கோபத்தை ரயில் மறியல் போராட்டங்கள் மூலமாக கடந்த 2 நாட்களாக பலமாக வெளிப்படுத்தி வருகிறது. ரயில் சேவைகளை ரத்து செய்யும் அளவுக்கு ரயில்வே துறை தள்ளப்பட்டுள்ள நிலையில் இனியேனும் இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு நியாயப்படி மத்திய அரசு நடக்குமா? என்பதுதான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கான உரிமையை அப்படியே கபளீகரம் செய்ய கர்நாடகாவுக்கு பச்சைகொடி காட்டி வருகிறது மத்திய அரசு. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் நியாயப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்தான் தமிழகம் காத்திருந்தது. ஆனால் அப்பட்டமாக மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றது மத்திய அரசு.

மத்திய அரசு துரோகம்

இப்படி மத்திய அரசு துரோகம் செய்யும் என எனவரும் எதிர்பார்க்கவில்லை. இந்த துரோகத்தைக் கண்டித்துதான் கடந்த 2 நாட்களாக தமிழகம் கொந்தளித்து கொண்டிருக்கிறது.

வடமாநிலங்களைப் போல..

வடமாநிலங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்டவற்று போராட்டங்கள் நடத்தும்போது ரயில் சேவைகள் பெருமளவு பாதிக்கப்படுவது வழக்கமாக இருக்கும். தற்போது தமிழக ரயில் மறியல் போராட்டங்களும் அத்தகைய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

விடிய விடிய போராட்டம்

சோழன் விரைவு ரயில் நாள் முழுக்க சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது… சரக்கு ரயில்கள் ஆங்காங்கே சிறைபிடிக்கப்பட்டுள்ளன.. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் தடுக்கப்பட்டிருக்கிறது… ஒட்டுமொத்தமாக ரயில்வே தண்டவாளங்கள் போர்க்களமாகிக் கிடக்கிறது… சாகுபடி பொய்த்து போகிறதே என்ற விரக்தியை வெளிப்படுத்த தண்டவாளங்களையே தங்கும் இடங்களாக்கி போராடுகின்றனர் விவசாயிகள்..

ரயில் நிலையங்களில் பதற்றம்

வேறுவழியே இல்லாமல் பல ரயில்சேவைகளை ரத்து செய்தாக வேண்டிய நிலைக்கு ரயில்வே துறை தள்ளப்பட்டுள்ளன… தமிழகத்தின் ஒவ்வொரு ரயில் நிலையமும் எப்போது எந்த கட்சியினரால் இயக்கத்தினரால் முற்றுகையிடப்படுமோ என்கிற பதற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இனியும் பாடம் கற்காவிட்டால்…

அரசியல் கட்சித் தலைவர்களும் நேற்றும் இன்றும் தண்டவாளங்களை போராட்ட களமாக்கி மறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.. விவசாயிகளின் கோபம் கர்நாடகாவுக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் நெய்வேலி அனல்மின்நிலையம் மீது திரும்பியுள்ளது…

என்.எல்.சி. சுரங்கங்களை…

இன்று என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், நிலக்கரி சுரங்கங்களையும் கைப்பற்றுவோம் என எச்சரித்துள்ளனர். இத்தனை கொந்தளிப்புகளுக்கும் ஒரே காரணம் மத்திய அரசு செய்த பச்சை துரோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை… இந்த உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு கர்நாடகாவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவோம் என அடம்பிடித்தால் நிச்சயம் மத்திய அரசுக்கு அது நல்லதல்ல என்பதுதான் தமிழகத்தின் போக்கு.

tamil.oneindia.com

TAGS: