திருவண்ணாமலை.. மலையை குடைந்து சாமியார்கள் ஆக்கிரமிப்பு… பக்தர்கள் போர்கொடி

thiru_malaiதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மலையை குடைந்து சாமியார்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிவ பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஸ்தலம் திருவண்ணாமலை. மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவில் மலையை வலம் வந்து வழிபாடு நடத்தி வரும் பக்தர்களால் இந்த இடம் படுபேமஸ்.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு பலர், சாமியார்கள் என்ற பெயரில் திருவண்ணாமலை மலையையே ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். நினைக்கும் இடத்தில் மலை ஆக்கிரமித்து கூடாரங்கள் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதனை அப்படியே கொஞ்சம் அப்கிரேட் செய்து டைல்ஸ், டிவி டிஷ், ஏசி என படு சோராக சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்.

மலையை குடைந்து கான்கீரிட் வீடுகளை அமைத்து இயற்கையை நாசம் செய்து வருவதால், மலையில் வாழும் அரிய ஜீவராசிகள் கீழே இறங்கி வந்துவிடுவதாகவும், இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு அரிய ஜீவராசிகளும் உயிரிழக்கின்றன. மக்களும் உயிரிழிக்கின்றனர். இதனால், இயற்கை சூழல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, திருவண்ணாமலையே நாசமாகி வருகிறது என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், சாதுக்கள் என்போர் எல்லாவற்றையும் துரந்தவர்கள் என்றும், அவர்கள் பாறையைக் குடைந்து வீடுகளை கட்டி, அதில் எல்ஈடி டிவி, டிஷ் ஆண்டனா வைத்து சொகுசாக வாழ்ந்து வருவதில் எந்த நியாயமுமில்லை என்கின்றனர் பக்தர்கள். இவற்றை எல்லாம் கேட்க யாருமே இல்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள் திருவண்ணாமலைவாசிகளும் சிவ பக்தர்களும்.

இதுதொடர்பாக எத்தனை முறை புகார் தெரிவித்தாலும், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இனியும் அமைதியாக இருக்காமல் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: