தஞ்சாவூர்: காவிரி விவகாரத்தில் ‘இந்திய’ அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் வெளியிட்ட அறிக்கை:
காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஐயனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் த. மணிமொழியன், மாவட்டச் செயலாளர் செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் சிமியோன் சேவியர்ராசு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், மீ.தி.எ.கூட. திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர்.
ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள்:
- நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்.
- தமிழ்நாட்டிற்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்குத் தமிழ் மக்கள் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.
- இந்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுகளைத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள், வீரர்கள், சான்றோர்கள் ஏற்கக் கூடாது. நடுவண் அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுகளைத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது. ஏற்கெனவே இவ்விருதுகளைப் பெற்றோர் அவ்விருதுகளை இந்திய அரசிடம் திருப்பித் தர வேண்டும்.
- நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு மக்கள் அங்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டும்.
- காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத – பாதுகாத்துத் தர மறுக்கும் இந்திய அரசு காவிரிப் படுகையைப் பாழ்படுத்தும் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக் கூடாது.
- தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
- கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புதையிலை உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் தமிழ்நாட்டுச் சந்தையில் அனுமதிக்கக் கூடாது. அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கக் கூடாது.
- நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் ஊழியர்களும், தமிழ் மக்களும் கர்நாடகம் செல்லாமல் தடுக்க வேண்டும்.
- கர்நாடகத் திரைப்படத் துறையினருடன் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கன்னடத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடாமல் தடை செய்ய வேண்டும்.
- இவ்வாறு பெ. மணியரசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- -http://tamil.oneindia.com