தலித்துகள் மீதான தாக்குதல்… வெட்கித் தலை குனிகிறேன்… பஞ்சாபில் மோடி வேதனை

modi-speechலூதியானா: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் தலித்துகள் மீதான தாக்குதல் இன்றளவும் தொடர்வதை எண்ணி வெட்கித் தலைகுனிவதாக வேதனை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தலித் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடக்கி வைத்தார். முதல்கட்டமாக ரூ. 490 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் தலித் தொழில்முனைவோரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தலை வலுப்படுத்தவும், கண்காணிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளைய தலைமுறை…

இளைய தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக “மலர்ச்சி இந்தியா; எழுச்சி இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு 1.25 லட்சம் கிளைகள் உள்ளன.

கடனுதவி…

இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கிக் கிளையும் குறைந்தது ஒரு பெண்ணுக்கும், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தலா ரூ.1 கோடி கடனுதவி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி மையம்…

இத்தகைய நடவடிக்கைகள் தலித் சமூகத்திலிருந்து 3.75 லட்சம் தொழில்முனைவோர்களை உருவாக்க வழிவகுக்கும். தற்போது அடுத்தகட்ட முயற்சியாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கென தொழில் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்; தொழில் தொடங்கத் தேவையான கடனுதவி வழங்கப்படும்; அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும். தலித் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் தொழில்முனைவோர்களாக உருவாகி, அவர்கள் பிறருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இது உறுதுணையாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியில் பங்கு…

சர்வதேச அளவில் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதற்கு முக்கியமானது. நாட்டில் உள்ள பிற இளைய தலைமுறையினரைப் போல தலித் இளைஞர்களும் மனது முழுக்க கனவுகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

வெட்கித் தலைகுனிகிறேன்…

உரிய வாய்ப்பையும், வழிகாட்டுதலையும் அளித்தால் வளமான தேசத்தை உருவாக்குவதில் அவர்கள் முக்கியப் பங்களிப்பார்கள். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகின்றன. இன்னமும் சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது; தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் சமூகத்தில் அரங்கேறுவதை எண்ணி வெட்கித் தலை குனிகிறேன். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கதராடை பயன்பாடு…

சுதந்திரப் போராட்டக் காலத்தில் கதராடை என்பது தேசத்தின் அடையாளமாக இருந்தது. தற்போது அது நவநாகரீகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. கதராடைகள் எக்காலத்துக்கும் ஏற்றவை. அவற்றை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இல்லங்கள் தோறும் கதராடைகளை நூற்கும் ராட்டைகள் இருந்தால் அது குடும்பத்துக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும்” என இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

முக்கியத்துவம்…

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தததாகக் கருதப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: