‘ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை வரும்போது பட்டாசுகள் தயாரிக்கும் இடமான சிவகாசியில் மனிதர்களின் இரத்தம் பூமியில் சிந்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் என்ன விதிவிலக்கா? இந்த வருடமும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிவகாசியில் உள்ள பட்டாசு கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் மின் லாரியில் பட்டாசு ஏற்றப்பட்டபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 20 பேர் பட்டாசு கிடங்கில் சிக்கினர்.
மேலும், பட்டாசு கிடங்கின் அருகில் உள்ள ஸ்கேன் சென்டரில் நோயாளிகளும் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பெண்கள் உள்பட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வளர்மதி, பாஸ்கர், ராஜா, சொர்ணகுமாரி, தேவி, பத்மாவதி, சுப்புலட்சுமி ஆகியோ உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 8 பேரும் அருகில் இருந்த ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் ஆவர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, பட்டாசு கடை உரிமையாளர் செண்பகராமன், கடைக்கு உரிமம் பெற்றிருந்த ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://news.lankasri.com
சிவகாசியில் தொடரும் பட்டாசு விபத்துக்கள்!
கொத்துக் கொத்தாக மடியும் உயிர்கள்!
தீபாவளி நெருங்கி விட்டால் பட்டாசு விற்பனையில் சிவகாசி பரபரப்பாகி விடும். முன்பெல்லாம் சிவகாசியில் இத்தனை பட்டாசுக் கடைகள் இருந்ததில்லை. காலப்போக்கில் வியாபார போட்டியால் சிவகாசி டவுண் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் எங்கெங்கும் பட்டாசுக் கடைகள் முளைத்து விட்டன. அதுவும் குடியிருப்பு பகுதிகளிலும் சந்து பொந்துகளிலும் கூட பட்டாசுக் கடைகளாகவே இருக்கிறது. சீசன் வியாபாரம் என்பதாலும், கொள்ளை லாபம் பார்க்க முடியும் என்பதாலும்தான், பட்டாசு வியாபாரத்தில் இத்தனை போட்டா போட்டி. இதில் கொடுமை என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் பட்டாசு கிட்டங்கி வெடித்து, ஊரையே கதிகலக்கிய அதே சிவகாசி பைபாஸ் சாலையில் இன்று (20-10- 2016) மீண்டும் விபத்து ஏற்பட்டு பல உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. சிவகாசி பைபாஸ் சாலையில் ராகவேந்திரா ஏஜன்ஸி என்ற பெயரில் பட்டாசுக் கடை நடத்தி வந்தார் ஆனந்தராஜன். இன்று அவர் கடைக்கு மினி லாரி ஒன்றில் மத்தாப்பு குச்சி பண்டல்களும் பட்டாசு பார்சல்களும் வந்தன.
அதிலிருந்து லோடு மேன்கள் பார்சல்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். சிகப்பு பாஸ்பரஸ் மற்றும் குளோரேட் கலவையிலான மத்தாப்பு குச்சிகள் உராய்வினால் தீப்பற்றக் கூடியவை. மத்தாப்பு பண்டல்களை லோடுமேன்கள் இறக்கிக் கொண்டிருந்த போது கை தவறி கீழே விழுந்து, உராய்வினால் தீ பிடித்து விட்டது. அந்த தீ மளமளவென்று பட்டாசு பண்டல்களுக்கும் பரவ, வெடிக்க ஆரம்பித்தது. உடனே லோடு மேன்களும் பட்டாசுக் கடை ஆட்களும் அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
ராகவேந்திரா ஏஜன்ஸியை அடுத்துள்ள கட்டிடத்தில் தேவகி ஸ்கேன் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு எப்போது ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருப்பர். இந்த ஸ்கேன் சென்டர் பெரிதாக இருந்தாலும் உள்ளே செல்லும் வழி குறுகலானது. பட்டாசு தீயிலிருந்து தப்பி விடலாம்; அதுதான் பாதுகாப்பனது என்றெண்ணி, நோயாளிகள் ஸ்கேன் சென்டரிலிருந்து வெளிவராமல் உள்ளேயே இருந்து கொண்டனர்.
பட்டாசு பண்டல்களில் பற்றிக் கொண்ட தீயினால் ஏற்பட்ட கரும்புகை ஸ்கேன் சென்டருக்குள் திமுதிமுவென்று புகுந்தது. இந்த புகையினால் மூச்சு திணறி ஸ்கேன் சென்டரில் வேலை பார்த்த 12 ஊழியர்களும், டாக்டர் ஜானகிராமனும், ஸ்கேன் எடுக்க வந்தவர்களும் மயங்கிச் சரிந்தனர். ஒரே வழியைக் கொண்ட ஸ்கேன் சென்டரில் பலர் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடுவதை அறிந்த பொது மக்கள், ஸ்கேன் சென்டரின் பின்பகுதி ஜன்னலையும் கட்டிடத்தையும் உடைத்து, மயங்கிக் கிடந்தவர்களை வெளிக் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், 8 பேர் பலியாகி விட்டனர். 13 பேர் படுகாயமுற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்கேன் டாக்டர் ஜானகிராமன் மிகவும் சீரியஸான நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகராஜன் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
1.ராஜா
2.தேவி
3.சொர்ணகுமாரி
4.பத்மலதா
5.காமாட்சி
6.வளர்மதி
7.பாஸ்கர்
8.புஷ்பலட்சுமி
பட்டாசு விற்பனைக்கு சம்பந்தமே இல்லாத தேவகி ஸ்கேன் சென்டர் ஊழியர்களும் நோயாளிகளும் இந்த விபத்தில் மாட்டிக் கொண்டு உயிரை விட்டது கொடுமையானது. பொது மக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பட்டாசுக் கடைகள் இயங்கி வருகின்றன. இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காண வேண்டியது அவசியம்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
-http://nakkheeran.in
ஆட்சியில் உள்ளவன் பிள்ளைகள் ஒரு பத்து பேர் செத்தால் இதற்கு ஒரு தீர்வு காணலாம்! அது வரையில் ஏழை வீட்டுப் பிள்ளைகளைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை!
அரச ஆணையம் வைத்து விசாரணை செய்து, தண்டனை வழங்க வேண்டும் …..