சென்னை: வங்கி ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி போலியான ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி அதன் மூலமாக பணத்தை திருடும் கும்பல் நீண்ட நாட்களாகவே கைவரிசை காட்டி வருகிறது.
சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் இது தொடர்பாக ஏராளமானோர் தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி ஏ.டி.எம். கார்டு மோசடி கும்பலையும் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட பலர் கும்பல் கும்பலாக கூண்டோடு பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ எனும் கருவியை பொறுத்தி அதன் மூலமாக கார்டுகளின் பின்நம்பரை தெரிந்து கொண்டு மோசடியில் ஈடுபடுவது இக்கும்பலுக்கு வாடிக்கையானதாகும்.
இதே பாணியை பின்பற்றி நீண்ட நாட்களாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி விட்டு டெபிட் கார்டுகளை கொடுத்து நாம் பணம் செலுத்துவோம். அதே போல பெட்ரோல் பங்குகளிலும் டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோம். இதுபோன்ற இடங்களிலும் ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர் திருடப்பட்டு வந்தது. இப்படி பல வழிகளிலும் ஏ.டி.எம். கார்டுகளின் பின்நம்பர்கள் திருடப்பட்டு வருகின்றன.
இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் தங்களது கைவரிசையை ஒரே நேரத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் காட்டி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யெஸ் வங்கி என்கிற தனியார் வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவியே மோசடிக் கும்பல் ரகசிய குறியீட்டு எண்களை திருடி உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையில் இந்த ரகசிய குறியீட்டு எண்கள் அதிக அளவில் திருடப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் பாங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., எச்.டி.எப்.சி. வங்கி, சென்ட்ரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் 32 லட்சம் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்கள் திருடப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து இந்த வங்கிகள் எஸ்.எம்.எஸ். மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதில் உடனடியாக உங்களது பின்நம்பர்களை பாதுகாப்பு கருதி மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், வங்கிகளிடம் விரிவான அறிக்கையை கேட்டுள்ளது.
இந்த தகவல் பொது மக்களிடையே வேகமாக பரவி பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளில் உள்ள தங்களது பணத்தை ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக யாரும் எடுத்து விடுவார்களோ? என்கிற அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக ஏ.டி.எம். பின்நம்பர்களை மாற்ற பலர் முன்வந்துள்ளனர். இதற்கான பணிகளை வங்கிகளும் முடுக்கிவிட்டுள்ளன.
சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே ஸ்கிம்மர் கருவியை பொறுத்தி அதன் மூலமாக பின்நம்பர்களை திருடி வந்த கும்பல், தற்போது இணையதளங்கள் மூலமாக பின்நம்பர்களை ஒட்டு மொத்தமாக திருடி இருப்பது நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏ.டி.எம். பின்நம்பர்களை திருடி, போலியான ஏ.டி.எம். கார்டுகளை தயாரிக்கும் கும்பல் வெளிநாடுகளில் இருந்தபடியே கூட இங்கு இருப்பவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியும், இதன் மூலம் நீண்ட காலமாகவே இக்கும்பல் சர்வதேச அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்படுவதையும் போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த நூதன திருட்டை தடுப்பது என்பது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.