இயற்கை மருத்துவம் மீதான மக்களின் ஆர்வமே எமனாக மாறுகிறதா? போலி சித்த வைத்தியர்களை கண்டறிவது எப்படி?

narasimha-swamy-300x198நெல்லை: ஆங்கில மருத்துவம் மீதான எரிச்சலும், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அரைகுறை புரிதலும் போலி சித்த வைத்தியர்களை தமிழகத்தில் வளரச் செய்துவருகிறது. இதன் எதிர் விளைவுதான், நெல்லை மாவட்டத்தில் நடந்த 4 பேரின் கொடுமையான மரணங்கள். இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம்தான் உயர் நடுத்தர வகுப்பினரின் பேசு பொருளாக மாறியுள்ளது. இவர்களை குறி வைத்துதான் ஆர்கானிக் பொருட்கள் விற்பனையகங்கள் நாடெங்கும் கிளை பரப்பி வருகின்றன.

“விலை கொஞ்சம் அதிகம்தான்.. ஆனா, பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரம் போடாத, உடம்புக்கு தீமையை தராத காய் கறி” என்று இந்த காய்கறிகளுக்கு சர்டிபிகேட் கொடுக்கப்படுகிறது. ஒரு வகையில், இந்த விழிப்புணர்வு நல்லதுதான் என்றபோதிலும், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் கடைசியில் உயிருக்கே வேட்டு வைத்துவிடும் என்பதற்கு தென்காசி சித்த வைத்தியர் கதை ஒரு உதாரணம்.

முத்துப்பாண்டி என்ற ‘சோ கால்டு’ சித்த வைத்தியர் கலக்கி கொடுத்த கசாயத்தை குடித்துவிட்டுதான், இருளாண்டி, பாலசுப்பிரமணியன் , சவுந்தரபாண்டியன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மயக்கம், வாந்தி ஏற்பட்ட அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். எனது மருந்தால் எந்த விளைவும் ஏற்படாது என காண்பிப்பதற்காக அதையே குடித்து காட்டிய முத்துப்பாண்டியும் மரணமடைந்துள்ளார்.

ஆங்கில மருத்துவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் கட்டுப்பாடு உள்ளதை போல சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்களை இனம் காண முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். மறுபக்கம், இயற்கை வைத்தியத்தின் மீதான ஆர்வம் அவர்களை உந்துகிறது. இவ்விரு சிக்கல்களுக்கும் நடுவேதான், இதுபோன்ற போலி வைத்தியர்களிடம் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள்.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற துறைகளில் வைத்தியம் பார்ப்போரின் அனுபவம், படிப்பு போன்றவற்றை தீர விசாரித்து, உண்மையான வைத்தியர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்க வேண்டும், அதை நோயாளிகள் பார்க்கும்படி வெளிப்படையாக ஒட்டி வைக்க வேண்டும், போலி வைத்தியர்களை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.

tamil.oneindia.com

TAGS: