சென்னை: சீனப்பட்டாசுகள் சந்தையில் கிடைப்பதை கட்டுப்படுத்தி உள்நாட்டில் தயாரித்த பட்டாசுகளே விற்கப்படும் தீபாவளியாக இந்த தீபாவளி மாறியிருக்கிறது. இதனால் சிவகாமி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுண்டி இழுப்பது பட்டாசுதான். பட்டாசுகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டாலும், அதனை புறந்தள்ளி மகிழ்ச்சியின் இன்னொரு வடிவமாய் பட்டாசுகளை நினைக்க தொடங்கிவிட்டாதால் பட்டாசுதான் தீபாவளியின் பிரதானம்.
பட்டாசு என்றால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுதான் என்றிருந்தது ஒரு காலத்தில். உலகமயத்திற்கு பின், இந்தப் பட்டாசுகளுக்கு போட்டி உருவானது. சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தப் பட்டாசுகள் விலை குறைவாக இருப்பதால் அதிக அளவில் இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் விற்பனையாகி வந்தது.
ஒவ்வொரு ஆண்டு சீனப்பட்டாசுகளின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சீனப்பட்டாசுகளின் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து தடுத்து வருகிறது. இதனையடுத்து, தீபாவளிக்காக பட்டாசு வாங்க எந்தக் கடைக்குச் சென்றாலும் அங்கு சீனப்பட்டாசு விற்பனைக்கு இல்லை.
சென்னையைப் பொருத்தவரை பூக்கடைதான் பட்டாசுகளை குவித்து வைத்திருக்கும் திறந்தவெளி கிடங்கு. அங்குள்ள குட்டி குட்டி தெருக்கள் முதல் சாலைகள் வரை தற்காலிக கடைகள் போட்டு பட்டாசு விற்பனை ஜோராக நடக்கும். இந்த கடைகளின் பக்கம் சென்று பார்த்தால் ஒரு கடையிலும் சீனப் பட்டாசு விற்கவும் இல்லை. மக்கள் கேட்டு வாங்கவும் இல்லை. சிறுவர்கள் கூட சீனப் பட்டாசை கேட்கவில்லை என்கிறார்கள் கடை உரிமையாளர்கள்.
சென்னையில் மட்டுமல்ல, வடமாநிலங்களில் கூட சீனப்பட்டாசுகளின் விற்பனை இல்லை என்கிறார்கள் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் அசோசியேஷனைச் சேர்ந்த ஆசைத்தம்பி. அங்கு சில்லரை பட்டாசு விற்பனையில் கூட சீனப்பட்டாசுகள் இல்லாமல் செய்ததற்கு காரணம் மத்திய அரசின் கடுமையான நடவடிக்கைகள்தான். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2 நாட்கள் மட்டும்தான் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். ஆனால் வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை ஒரு வாரத்திற்கு கொண்டாடுவார்கள். இதனால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதம் வடமாநிலங்களுக்குத்தான் செல்கிறது. 30 சதவீதம் தான் தமிழ்நாட்டின் தேவையாக இருக்கிறது.
எனவே, வட மாநில பட்டாசு விற்பனையில் சீனப்பட்டாசை தடுத்து வைத்துள்ளது என்பது உள்நாட்டு உற்பத்தியின் விற்பனைக்கு சாதகமான சூழல் நிலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளால் சுமார் 4000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதில் சிவகாசியில் இருந்து மட்டும் உற்பத்தியாவது 90 சதவீதமாகும்.
பட்டாசுகளால் கிடைக்கும் வருமானம் ஒரு புறம் இருக்க, சீனப்பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் கெமிகல்ஸ் தரம் குறைந்து காணப்படுவதால் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனாலும், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் சீனப்பட்டாசுகளை தடை செய்ய மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று பட்டாசு உற்பத்தியாளர் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
சீனப்பட்டாசு விற்பனைகளை வடமாநிலங்களில் கடுமையாக கண்காணிப்பது போன்றே தமிழகத்திலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில், தீவுத் திடலில் தமிழக அரசு சார்பில் 58 கடைகள் போடப்பட்டுள்ளன. இங்கும் சீனப்பட்டாசு விற்பனையாகிறதா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சென்னை நகரம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக பட்டாசுகள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சீருடை இல்லாத போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி சீசன் நேரங்களில் திருச்சியில் பொதுவாக சீனப்பட்டாசுகள் விற்கப்படுவது வாடிக்கை. ஆனால் அங்கு கூட இந்த ஆண்டு சீனப்பட்டாசுகள் விற்கப்படவில்லை. யாராவது சீனப்பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது வழக்கு பதியப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஆக, எப்படி சுத்தி சுத்தி பார்த்தாலும், வடமாநிலங்களிம் சரி தென் மாநிலங்களிலும் சரி இந்த ஆண்டு சீனப்பட்டாசுகளின் விற்பனை இல்லவே இல்லை என்று சொல்லலாம். எந்தப் பட்டாசானாலும் கவனத்தோடு வெடித்து விபத்தில்லாமல் பண்டிகையை கொண்டாடுவதே சிறந்தது.