எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்… பாகிஸ்தானுடன் இனிப்பு பகிர்ந்துகொள்ளப்போவதில்லை!

soldiersஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து நிலை குலையச் செய்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புராவில் ராணுவ வீரர்கள் மெழுகுவர்த்தி மற்றும் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு பஞ்சாபின் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டரி-வாகா என்னும் இடத்தில், இருநாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் இனிப்பு பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பாகிஸ்தான் இந்திய எல்லைப்பகுதிகளில் நடத்திவரும் தொடர் தாக்குதல்களால், தீபாவளிக்கு அவர்களுடன் இனிப்பு பகிர்ந்துகொள்ளப்போவதில்லை என்று இந்திய பாதுகாப்புப்படை சார்பில் கூறப்பட்டிருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: