குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டியது அவசியம்: மோடி வலியுறுத்தல்

modi33-01-1477941360டெல்லி: குழந்தைகள் ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு மொழி பேசும் போது, தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, வல்லபாய் பட்டேலின் டிஜிட்டல் கண்காட்சியை மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நான் பாஜக-வை சேர்ந்தவன். ஆனால், வல்லபாய் பட்டேல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனாலும், எந்த கட்சியையும் சாராத அவரது கொள்கை மற்றும் நம்பிக்கைகளை நான் பின்பற்றுகிறேன். அவர் மீது யாரும் காப்புரிமை கொண்டாட முடியாது. பெண்கள் இடஒதுக்கீட்டை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

ஆனால், அதன்பின்னர் அவரது திட்டம் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டது. இந்த கண்காட்சி மூலம் சர்தார் பட்டேலின் உண்மையான மற்றும் முழுமையான வாழ்க்கை சித்தரிக்க முடிந்தவரை முயற்சி செய்துள்ளோம் என்றார். மேலும் குழந்தைகள் மொழி ஆற்றல் குறித்து பேசிய மோடி, நமது குழந்தைகள், ஸ்பானிஷ், பிரஞ்சு மொழிகள் பேசுவதை கண்டு பெருமைப்படுகிறோம். ஆனால், தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: