உதய்பூர்: ராஜஸ்தானில் ரூ. 4, ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த மாதம் 29ம் தேதி அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 23 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள மான்ட்ராக்ஸ் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரத்து 700 கோடி ஆகும். இந்த வழக்கில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக தலைவர் ஜெயந்த் மிஸ்ரா கூறுகையில், இந்தியாவில் முதல்முறையாக இவ்வளவு அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏன் உலக அளவில் கூட இவ்வளவு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதல் முறை எனலாம். இது தொடர்பாக பாலிவுட் தயாரிப்பாளர் சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.