வீட்டை விட்டு வெளியே வராதீங்க: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்

delhiஇந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. புகை மூட்டம் காரணமாக டெல்லியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் கெஜ்ரிவால் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில்,

* நாளை முதல் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படும்.

* அடுத்த 10 நாட்களுக்கு பதர்பூர் மின் நிலையம் மூடப்படும்.

* அடுத்த 10 நாட்களுக்கு டெல்லியில் மின்சார ஜெனரேட்டர்களுக்கு தடை .

* டெல்லியில் மீண்டும் வாகன போக்குவரத்தில் ஒற்றை இலக்க பதிவெண் முறை கொண்டு வரப்படும். இதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

* அடுத்த 3 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.

* செயற்கை மழை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதற்கு வாய்ப்பு இருந்தால், மத்திய அரசின் உதவி கோரப்படும்.

* மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். வீட்டில் இருந்தாவாறு வேலை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

* டெல்லியில் அடுத்த 5 நாட்களுக்கு புதிய கட்டுமானங்கள் நடக்கவோ, கட்டட இடிபாடுகள் நடக்கவோ தடை விதிக்கப்படுகிறது.

* வாகனங்களில் சாம்பல் எடுத்து செல்ல தடை விதிக்கப்படும்.

* குப்பை மேடுகளில் தீவைப்பது நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.

அதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் காற்று தரமானதாக இல்லை. இந்த பட்டியலில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் 1990-களில் இடம்பெற்றிருந்தவையே என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உள்ள 29 நகரங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: