“500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு கடந்த 8ஆம் தேதி இரவு வெளியானது.
அதிலிருந்து கணக்கில் வராத பணத்தை இருப்பு வைத்திருந்தவர்கள் பலரும் அந்த தொகைக்கு தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
நாட்டின் சில முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தங்க வர்த்தகர்கள் ஒருகிலோ தங்கத்தின் விலைக்கு மேல் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை அதிக இலாபம் வைத்து விற்றதாக செவிவழி தகவல் பரவியது.
இதனால், சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான நகை கடைகளில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதியில் இருந்து கடந்த 4 நாட்களாக தாங்கள் கொள்முதல் செய்து வைத்திருந்த தங்கத்தின் அளவு, விற்பனை செய்யப்பட்ட தங்கம் தொடர்பான கணக்கு மற்றும் இருப்பு விபரங்களை தாக்கல் செய்யுமாறு நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகை வியாபாரிகளுக்கும் மத்திய கலால் புலனாய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் கடந்த 4 நாட்களாக கையாண்ட தங்கத்தின் அளவு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலால் புலனாய்வுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-http://www.tamilwin.com