யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த 52 வயதான வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாயில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி சமூக சேவையில் அதிக அக்கறை கொண்டவர். அனைவருக்கும் கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், 10 ஆயிரத்து 975 கிலோ எடை கொண்ட கல்வி உபகரணங்களை ஒரே நாளில் சேகரித்து கொடுத்து கிருஷ்ணமூர்த்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2000 ஆயிரம் புத்தகப் பைகள் உள்ளிட்ட 10,975 கிலோ எடையுள்ள பொருட்களைத் திரட்டியுள்ளார்.
சிரியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கில் குறித்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சேகரிக்கப்பட்டுள்ள பொருட்கள் எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் என்ற அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 4,571 கிலோ பொருட்களை ஒரே நாளில் திரட்டிக் கொடுத்தமையே கின்னஸ் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com