மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாக உள்ளன. இவற்றைக் காண நாள்தோறும் உள் நாட்டு பயணிகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்வர்.
ஆனால் கடந்த 8ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்களிடம் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் காத்துக் கிடக்கின்றனர்.பணம் எடுக்க ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். இதனால் அன்றாட செலவுக்கே மக்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்தியா வந்துள்ள வெளிநாட்டு பயணிகளும் தங்களிடம் உள்ள பணம் செல்லாது என்பதால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.தங்கும் விடுதிகளில் 500,1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படவில்லை என்றும் தங்கள் நாட்டு கரன்சியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவற்றை மாற்றவும் வங்கி நிர்வாகம் ஒத்துக்கொள்வதில்லை என்றும் வெளிநாட்டுப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பணப்புழக்கம் குறைந்ததால் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. வெளிநாட்டு பயணிகளும் வெளியேறி வருகின்றனர்.
இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புராதன சிற்பங்களை காண வசூலிக்கும் கட்டணத்துக்கு 500 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது என தொல்லியல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
இதனால் சில்லரை இன்றி தவிக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டதைப் போல் மாமல்லபுரத்திலும் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என அப்பகுதியினர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.