ஜாகீர் நாயக் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு- மும்பையில் 10 இடங்களில் அதிரடி ரெய்டு!

Zakirமும்பை: இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) எப்.ஐ.ஆர். போட்டுள்ளது. அத்துடன் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜாகீர் நாயக்கின் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த தொண்டு நிறுவனம் செயல்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம்தான் இத்தடைக்கு ஒப்புதல் அளித்திருந்தது. வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் ஜாகீர் நாயக், இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுமாறு தூண்டுகிறார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு. வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் தாம் ஜாகீர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்தே ஜாகீர் நாயக்கின் தொண்டு நிறுவனத்தின் மீதான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதேபோல் கேரளாவிலும் சிலர் தாங்கள் ஜாகீர் நாயக்கால் ஈர்க்கப்பட்டதாக கூறி பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆகையால் ஜாகீர் நாயக் தொடர்பாக கேரளா போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்

tamil.oneindia.com

TAGS: