தினசரி தேவைக்கான பண பரிமாற்றத்தை செய்வதில் மக்கள் பல பரிச்சனைகள் சந்திக்கும் இத்தகைய நிலையிலும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற 13 வழிகள் உண்டு என்றால் நம்ப முடியுமா.? ஆனால் அதுதான் உண்மை.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியில் திடீரென ஒரு குழந்தைக்கு மருத்துச் சிகிச்சை தேவைப்பட்டது. இக்குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்தாலும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஆம்புலன்ஸ் உரிமையாளர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெறாத கரணத்தால், பெற்றோர்கள் சில 100 ரூபாய்களைப் பெறுவதற்குள் இக்குழந்தையின் உயரி பிரிந்தது.
இதுபோல் பல காரணங்களால் இந்தியாவில் கடந்த 2 வாரத்தில் 15க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவை அனைத்திற்கும் காரணம் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாயின் புழக்கத்தின் தடை தான். இப்படி இறந்தவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்கள் தான். அதிகக் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் இறந்ததாக இதுவரை எந்தச் செய்தியுமில்லை. காரணம் அதிகப் பணம் படைத்தவர்களுக்குக் கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்பது நன்றாகத் தெரியும்.
இந்தியாவில் ‘மோடி’யின் அறிவிப்புக்குப் பின்னும் எப்படியெல்லாம் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றப்படுகிறது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் நோக்கம், இத்தகைய பரிமாற்றங்களை மத்திய அரசு தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறது, கீழே கூறப்பட்டுள்ள வழிகளை நீங்கள் பயன்படுத்தினால் காவல் துறையினரால் நீங்கள் கைது செயப்படலாம்.
கூகிள் தேடல்
இந்தியாவில் கருப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று கூகிளில் தேடிய அதிகப்படியானோர் குஜராத் மாநிலத்தவர்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பினால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் ஒரு சில 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றி வரும் கூட்டம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதிகக் கருப்ப பணம் உடையோர் எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். சரி கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் 13 வழிகளை இப்போது பார்ப்போம்.
கோவிந்தா கோவிந்தா..
இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த சில நொடிகளில் அதிகக் கருப்புப் பணம் உடையோர் முதலாவதாகத் தட்டிய கதவு கோவில் அறக்கட்டளைகள் தான். கோவில் அறக்கட்டளைகள் மூலம் பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை அதிகளவிலான கமிஷன் தொகையுடன் மாற்றி வருகின்றனர். ஏபிபி செய்தி நிறுவனம் நடத்திய ரகசிய விசாரணையில் மதுரா கோவர்தன் கோவில் அர்ச்சகர் வாயிலாக 50 லட்ச கருப்புப் பணத்தை 20 சதவீத கமிஷன் தொகைக்கு மாற்ற உதவி செய்துள்ளார். இத்தகைய செயல்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
பின் தேதியிலான வைப்பு நிதிகள்
கூட்டுறவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகக் கருப்புப் பணம் உடையோருக்கு அறிவிப்புக்கு முந்தைய தேதியில் வைப்பு நிதியில் முதலீடு செய்யச் சிறப்புச் சலுகையை அளிக்கிறது. குறிப்பாகச் சிறு நகரம், டவுன் மற்றும் கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் NBFC நிறுவனங்கள் இத்தகையை Back Dated வைப்பு நிதி சேவை எளிமையாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
ஏழைகளின் உதவி
இந்தியாவில் குறைந்த வருமான உடையோர் தங்களிடம் இருக்கும் சில 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் நின்றுகொண்டு இருக்கும் நிலையில், இவர்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒவ்வொருவரின் கணக்கிலும் 2.54 லட்சம் வரை வைப்புச் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த பிறகு இவர்களின் கணக்கில் இருக்கும் தொகையை அவர்கள் மூலமாகவே வித்டிரா செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கி வைப்புக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் வரை வைப்பு செய்வோர் மீது எவ்விதமான கேள்விகளும் கேட்கப்போவதில்லை.
வட்டியில்லாக் கடன்
கருப்புப் பணத்தை வெள்ளையாகும் வித்தகமாகத் தற்போது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் அதிகக் கருப்புப் பணம் வைத்திருப்போர் தங்களுக்கு நம்பிக்கை உடையோருக்கும், நிலையான வளர்ச்சியைக் கண்டு வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடனை அளித்து வருகின்றனர். அடுத்தச் சில மாதங்களில் இப்பிரச்சனை முழுமையாகக் குறைந்தபின் கருப்புப் பண முதலைகள் பணத்தைத் திரும்பப்பெறுவார்கள்.
ஜன்தன் வங்கி கணக்குகள்
இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் வண்ணம் மத்திய அரசு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக இலவச வங்கிக் கணக்கு திறக்கும் சேவையை வழங்கப்பட்டது. இதுவரை இந்தக்கணக்கில் அதிகளவிலான வைப்புகள் வராத நிலையில் தற்போது அதிகளவிலான வைப்புகள் குவிந்து வருகிறது. ஜன்தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட 80 சதவீத கணக்குகள் மிகவும் குறைந்த வருமான உடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பல வங்கி அதிகாரிகள் மற்றும் கருப்பு பண முதலைகள் இணைந்து கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் வேலைக்கு இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மாஃபியா
ஒரே இரவில் இந்தியாவில் பல இடங்களில் ரூபாய் நோட்டு மாஃபியா-க்கள் உருவாகியுள்ளனர். இவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்களுக்கு 15 முதல் 80 சதவீத கமிஷனை பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு 100 ரூபாய் நோட்டுகளை அளிக்கின்றனர். இவை அனைத்தும் கள்ள சந்தையில் நடப்பவை. மாஃபியா பல பகுதிகளில், பல வழிகளில் கிடைக்கும் 100 ரூபாய் நோட்களைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் செய்து வருகின்றனர்.
நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் பல நிறுவன தலைவர்கள் தங்களின் ஊழியர்களுக்கு வங்கி கணக்கை துவங்கி 3 முதல் 8 மாதம் வரையிலான முன்கூடிய சம்பளத்தை அளிக்கின்றனர். இப்படி வைப்புச் செய்யப்படும் பணம் அனைத்தும் 500, 1000 ரூபாய் நோட்கள் தான். மேலும் வைப்புத் தொகை 2.5 லட்சத்திற்கும் குறைவான மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வங்கி கணக்கை மட்டும் துவக்கி டெபிட் கார்டுகளைத் தன்னகத்தில் வைத்துக்கொள்கிறது. இதனால் ஊழியர்கள் பணத்தை வெளியில் எடுக்க முடியாது என்பது மட்டும் அல்லாமல் 3 முதல் 8 மாதம் வரையில் டெபிட் கார்டு நிறுவன கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ரயில் டிக்கெட்
நவம்பர் 14ஆம் தேதி வரை இந்திய ரயில்வே துறை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றதால் அதிகளவிலான ரயில் முன்பதிவுகளைக் குவிந்தது. சில நாட்களுக்குப் பின் முன்பதிவு சீட்டை ரத்து செய்துவிட்டு சிறிய அளவிலான ரத்துக் கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு புதிய ரூபாய் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பெறப் பலர் முற்பட்டனர். இதனால் இந்திய ரயில்வே துறை ரீபண்ட் தொகையைப் பணமாக அளிக்க முடியாது எனத் தெரிவித்தது. எனவே அனைத்து ரத்துச் செய்யப்பட்ட பணமும் உரிமையாளரின் வங்கி கணக்கில் வைப்பு வைக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பல சலவை
நிறுவனங்கள் கொல்கத்தாவில் ஜமா-கார்சி, மும்பையில் பட்-போடி என அழைக்கப்படும் பணச் சலவை நிறுவனங்களை நடத்துவது சார்ட்டர்ட் அக்கவுண்டண்கள். இந்த நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு அதிக நிதி தேவை இருக்கும் துறைகளில் வாயிலாக அதிகளவிலான கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவுகிறது.
தங்கம்
மோடி வெளியிட்ட அறிவிப்பால் இந்தியாவில் தங்கம் விற்பனை உச்சத்தை அடைந்தது. பல நகைக்கடை உரிமையாளர்கள் தங்கத்தைப் பின் தேதியில் பெற்றதாகக் கணக்கு காட்டி அதிகளவிலான தங்க நகை, தங்க பிஸ்கட்களை விற்பனை செய்துள்ளனர். பின் தேதியிட்ட பில் மூலம் வாங்குபவர்களிடம் கணிசமான கமிஷனை பெறுகிறது நகை கடைகள். இத்தகைய பரிமாற்றத்தால் 15 முதல் 20 சதவீத கமிஷன் நகை கடை உரிமையாளர்களுக்குக் கமிஷன் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் எவ்விதமான பில்களும் இல்லாமல் சந்தை விலைக்கும் அதிகமான தொகையைக் கொடுத்துத் தங்கத்தை வாங்கப் பல கருப்புப் பண முதலைகள் செயல்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தால் 40 சதவீத வரை கமிஷன் நகை கடை உரிமையாளர்கள் லாபம் கிடைக்கிறது.
விவசாயி
விவசாயத்தின் மூலம் எவ்வளவு வருமானம் லாபம் வந்தாலும் அதற்கு வரி இல்லை. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் பல விவசாயிகள் மூலம் கருப்பு பண முதலைகள் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர். இதனால் இந்த வருடம் விவசாயிகளின் வருமான அளவில் மிகப்பெரிய உயர்வை இந்தியா பார்க்போகிறது.
அரசியல் கட்சிகள்
இந்திய சட்ட அமைப்பின் படி அரசியல் கட்சிகள் 20,000 மற்றும் அதற்குக் குறைவாகப் பெறப்படும் நன்கொடைக்கு யார் அளித்தார் என்ற விபரங்களை அளிக்கத் தேவையில்லை. இதனால் பல அரசியல் கட்சிகள் நன்கொடையின் வாயிலாகப் பல கருப்புப் பண முதலைகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப் பெறப்படும் தொகையை டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பின் வெள்ளையாக மாற்ற முடியும்.
வங்கியின் கோடிகள்
முதலீடு வங்கியின் கருப்பு பண முதலைகள் தங்கள் வருமான அறிக்கைக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் வங்கியிலோ, நிதி நிறுவனங்களிலோ டெப்பாசிட் செய்தால் 33 சதவீத வரி மட்டும் அல்லாமல் வரி மீதான 200 சதவீத அபராதம் விதிக்கப்படும். ஆனால் வருமான அறிக்கையில் ‘other sources’ என்பதன் கீழ் எவ்வளவு தொகையைக் கணக்குக் காட்டினாலும் அதற்கு 33 சதவீத வரியை மட்டும் செலுத்தினால் போதும். இந்தப் பிரச்சனையை மத்திய அரசு எப்படிக் களைய போகிறது என்று 2017ஆம் ஆண்டுப் பார்ப்போம்.
கருப்பு ‘பணம்’ மட்டும் தானா..?
இந்திய மக்கள் மத்தியில் கருப்புப் பணம் வெறும் பணமாக மட்டும் இல்லை. ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, பன்னாடு நாணயங்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு, பினாமி கணக்குகள், பங்குச் சந்தை முதலீடு எனப் பல வழிகளில் உள்ளது. இதில் பணமாக இருப்பது வெறும் 6 சதவீதம் மட்டுமே என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது.