டெல்லி: மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பு கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் என்பது உண்மையாக இருந்தால், இந்நேரம் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களில் ஓரிருவருக்காவது மாரடைப்பு வந்திருக்கணுமே… உண்மையில் அப்படி ஒண்ணும் நடக்கலையே.. எல்லாரும் சந்தோஷமாகத்தானே இருக்காங்க, என்று தடாலடியாகக் கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
மோடியின் பண ஒழிப்பு நடவடிக்கையை மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அர்விந்த் கெஜ்ரிவால்.
இந்த பண ஒழிப்பை மிகப்பெரிய ஊழல் மோசடி, மக்கள் விரோதம் என்று வர்ணித்துள்ளார் கெஜ்ரிவால். இதுகுறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்…
கேள்வி: மோடியின் பண ஒழிப்பை ஏன் மிகப் பெரிய ஊழல் மோசடி என்கிறீர்கள்?
கெஜ்ரிவால்: பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால் மக்களுக்கு எத்தனை துன்பம்? எத்தனை மரணங்கள்? இன்னும் எவ்வளவு பேர் சாக வேண்டும் என அவர் எதிர்ப்பார்க்கிறார்? இந்த அறிவிப்பு மூலம் தன் சொந்த மக்களின் முதுகில் குத்தியுள்ளார் மோடி. சாதாரண மக்கள் மகிழ்ச்சியாக உறங்குவதாகவும், கறுப்புப் பண முதலைகள் துன்பத்தில் இருப்பதாகவும் மோடி சொல்கிறார். நாட்டில் மிகப் பெரிய கறுப்புப் பண முதலைகள் உள்ளனர். சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள 648 முதலைகளின் பெயர்ப் பட்டியல் மோடியிடம் உள்ளது. இவர்களில் துன்பத்தில் உள்ள ஒரே ஒரு கறுப்புப் பண ஆசாமியைக் காட்டுங்கள் பார்ப்போம்?
உண்மையிலேயே இது கறுப்புப் பணத்தின் மீதான போர்தான் என்றால் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியுள்ள ஒன்றிரண்டு பேருக்காவது நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் உண்மையில் மாரடைப்பு வந்து செத்தது யார் பார்த்தீர்களா… விவசாயிகளும், உழைப்பாளிகளும், அப்பாவி பொதுமக்களும்தான். 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி, புதிதாக 2000 ரூபாயைக் கொண்டு வந்தால் கறுப்புப் பணம், ஊழல் எப்படி ஒழியும் என்பது எனக்குப் புரியவே இல்லை.
இது கறுப்புப் பண, ஊழல் பேர்வழிகளுக்கு இன்னும் வசதிதானே! புதிய 2000 நோட்டுகள் மூலம் லட்ச லட்சமாக ஏற்கெனவே ஊழல் பணம் பிடிபட்டுள்ளது. சில பெரிய மனிதர் வீடுகளில், விசேஷங்களில் கட்டுக்கட்டாக புதிய 2000 புழங்குகிறது.
எனவே மோடியின் இந்தத் திட்டம் முற்றாக தோற்றுப் போன ஒன்று. மோடியின் இந்த பண ஒழிப்பின் நோக்கம் என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்த நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மொத்தம் ரூ 8 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. அதாவது திரும்பி வசூலிக்கவே முடியாத கடன்கள். இந்தக் கடன் அனைத்தும் சாமானிய மக்கள் பெற்றதல்ல. மிகவும் பலம் பொருந்திய கறுப்புப் பண முதலைகள் பெற்றுள்ள கடன். மோடி அரசு ஏற்கெனவே ரூ 1.14 லட்சம் கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டது. இன்னும் 7 லட்சம் கோடியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான நிதி ஆதாரமில்லை. எனவே அந்த நிதியை அப்பாவி மக்களின் பணத்தை வைத்து சரிகட்ட நடக்கும் சதிதான் இது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடியைப் போன்ற மோசடிப் பேர்வழியை நாடு இதுவரை பார்த்ததில்லை! -இவ்வாறு கூறியுள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.