மும்பை: பிரதமர் மோடியின் உயர் மதிப்பு பண ஒழிப்பால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது இந்திய சுற்றுலாத் துறை. நாடு முழுவதும் ஏடிஎம்கள் இயங்காததாலும் போதிய பணப் புழக்கம் இல்லாததாலும் இந்தியாவில் இப்போது சுற்றுப் பயணத்தில் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் ஏடிஎம்களையே பெருமளவு நம்பி இருந்தனர்.
ஏடிஎம்கள் வேலை செய்யாததால், ஆங்காங்கே உள்ள புரோக்கர்கள், விமான நிலையப் பகுதிகளில் உள்ள பணம் மாற்றித் தருபவர்களிடம் அதிக கமிஷன் கொடுத்து ரொக்கத்தைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலை இப்படி என்றால், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வர நினைப்பவர்கள் யாருமே இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தியாவின் பெயர் சிதைந்துபோயுள்ளது. ‘இந்தியாவுக்குப் போனால் போதிய பணம் கிடைக்காமல் பட்டினிதான் கிடக்க வேண்டும்’ என்ற அளவுக்கு மீடியாவில் பண ஒழிப்பு பாதிப்புகள் தினமும் செய்தியாகி வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாமஸ் குக் போன்ற பண மாற்று மையங்களில் குறிப்பிட்ட அளவு தொகை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குத் தர அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத் தாண்டி தரமுடியாது. “தர முடியாது என்றல்ல… எங்களிடம் ரொக்கப் பணமே இல்லை. அந்த அளவுக்கு மோசமான நிலை,” என்று தெரிவித்துள்ளது தாமஸ் குக். அதுவும் 2000 மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே தரப்படுவதால், சில்லறை இல்லாமல் உள்ளூரில் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.