இது சின்ன வலிதான்… மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்! – பிரதமர் மோடி

001டெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு சின்ன வலிதான். அதை நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது கருப்புப் பண ஒழிப்பின் தொடக்கம்தான் என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. ரூபாய் ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நடக்கும் முதல் பாஜக எம்பிக்கள் கூட்டம் இது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:

கருப்புப் பணம், ஊழல், முறைகேடுகளால் கடந்த 70 ஆண்டுகளாக ஏழை மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சுரண்டப்பட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் ஆதங்கம் தெரிவித்தார். நாம் (பாஜக) ஆட்சிக்கு வந்திருப்பது சுயலாபத்துக்காகவோ, நம்மைச் சார்ந்தவர்கள் நலனுக்காவோ அல்ல என்று தெரிவித்த அவர், ஏழைகளின் துயர் துடைக்கவே மக்கள் நமக்கு அதிகாரத்தை வழங்கியிருப்பதாகக் கூறினார்.

மேலும், கருப்புப் பணத்தின் ஆதிக்கத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடரில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, பழைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஒரு தொடக்கம்தானே தவிர முடிவு அல்ல என்று உறுதிபடத் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற விவகாரத்தில் மக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. பெரியதொரு மாற்றத்தை முன்னெடுக்கும்போது சிறிய வலியைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் தற்போது மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பது எதிர்காலத்தில் வளமான தேசம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,” என்றார் அவர்.

tamil.oneindia.com

TAGS: