பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி

Kashmir-Mapபுதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக உள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது; இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தவர்கள், நாடு சுதந்திரம் அடைந்தபோது ஏற்பட்ட பிரிவினை மற்றும் 1965, 1971 போரின்போது, அகதிகளாக, நம் நாட்டில் தஞ்சமடைந்தனர்.இவ்வாறு அகதிகளாக உள்ள, 36 ஆயிரத்து, 384 குடும்பங்களில் பெரும்பாலானவை, ஜம்மு – காஷ்மீரில் வசிக்கின்றன. இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, துணை ராணுவத்தில் வேலைவாய்ப்பு, மாநில வேலைவாய்ப்பில் சம உரிமை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டிருந்தன.

 

ரூ 2,000 கோடி

இந்த அகதிகளுக்கான மறுவாழ்வு அளிக்கும், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான மத்திய பட்டியல், புதிதாக, 15 ஜாதிப் பிரிவுகளை சேர்க்கவும், 13 பிரிவுகளில் திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம், பீஹார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, இந்த ஜாதிப் பிரிவினர் இதன் மூலம் பலன் பெறுவர்.

-http://www.dinamalar.com

TAGS: