மனைவியின் சடலத்துடன் போராடிய கணவனின் அவலநிலை: காரணம் என்ன?

உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பால், வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் அதை எடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. இதனால் நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தினக்கூலியான முன்னி லால்(66). இவரது மனைவி பூல்வதி(61).

பூல்வதி புற்றுநோயால் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார்.

அவரின் உடலை அடக்கம் செய்ய கையில் பணம் இல்லை. மகன்களை அழைத்து வங்கியில் பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

ஆனால், இரண்டு நாட்களாக வங்கியில் பணம் எடுக்க சென்றவர்கள் பட்டுவாடா செய்வதற்கு பணம் இருப்பு இல்லை என்று வங்கி நிர்வாகம் சொன்னதை அடுத்து, ஒரு பிளாஸ்டிக் டென்ட் போட்டு தனது மனைவியின் சடலத்தை அங்கு வைத்தார்.

இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும், உள்ளூர் அரசியல் பிரமுகரும் சென்றுள்ளனர்.

இதையடுத்து, இறுதிச்சடங்கு நடத்த காவல் அதிகாரி 2000 ரூபாயும், அரசியல் பிரமுகர் 1000 ரூபாய் கொடுத்தும், லால் தனக்கு வங்கயில் பணம் இருக்கிறது, எனது பணத்தைக் கொண்டு தான் மனைவியின் இறுதிச் சடங்கை நடத்துவேன் என பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் வங்கிக்கு பணம் கொடுத்ததை அடுத்து தனது மகனின் கணக்கில் இருந்து 15,000 ரூபாயை லால் எடுத்துக்கொண்டு தனது மனைவியின் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: