அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் வித்யசாகர் ராவ் சென்று வந்தது, ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியது ஆகியவை குறித்து கவர்னரின் துணைச் செயலாளரும் கவர்னர் மாளிகை தகவல் தொடர்பு அதிகாரியுமான மோகனிடம் ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ கீழ் கடந்த அக்டோபர் 24-ம் தேதியிட்டு, 8 கேள்விகளுக்கு தகவல் அளிக்கும்படி மனு அனுப்பி இருந்தார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி.
இதற்கு உரிய பதில் கிடைக்காததால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கடந்த நவம்பர் 25-ம் தேதி மேல் முறையீடு செய்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அக்டோபர் 1-ம் தேதி அப்போலோ சென்றார். பின்னர், கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், `முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்’ என்றார்.
அக்டோபர் 22-ம் தேதி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்போலோ சென்று வந்த பிறகு, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கு ஆளுநர் நேரில் சென்று விசாரித்தார்’ என்றுதான் சொல்லி இருந்தார்கள். முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் சந்தித்தாரா… இல்லையா? என்ற கேள்விக்கு அதில் தெளிவான விளக்கம் இல்லை.
எனவே, இந்தச் சந்திப்புகள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேள்விகள் கேட்டிருந்தேன்.
அப்போலோவுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், தனது பணி நிமித்தமாகச் சென்றாரா? அல்லது தனிப்பட்ட விவகாரம் காரணமாகச் சென்றாரா? அப்போலோவில் ஜெயலலிதாவை அவர் ஏன் சந்திக்கவில்லை? ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் கவர்னரை தடுத்தது யார்?
முதல்வரை கவர்னரால் சந்திக்க முடியவில்லை என்றால் அரசமைப்பு சட்டம் ஷரத்து 167-ன் படி மாநில அரசாங்கம் பற்றிய தகவல்களை கவர்னரோடு பரிமாறிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறதே? இந்த சூழ்நிலைகளில் அரசமைப்பு சட்டம் ஷரத்து 356-ஐ பயன்படுத்தாமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
முதல்வர் பணிகளை ஜெயலலிதா செய்யத் தவறிய நிலையில் புதிய முதல்வரை நியமிக்க கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கேள்விகள் கேட்டு இருந்தேன். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், இந்த கேள்விகள் எல்லாம், ‘அனுமானம்’ அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் படி தகவல் என்ற இலக்கணத்துக்குள் இந்த கேள்விகள் வரவில்லை’ என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்குத் திரும்பும்வரை, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புக்களை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார்’ என்று முதல்வரின் பரிந்துரை அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 11-ம் தேதி அறிவித்தார்.
முதல்வரின் இந்தப் பரிந்துரையானது வாய்மொழி உத்தரவா அல்லது எழுத்து பூர்வமானதா? வாய்மொழி வழியானது என்றால் இதுபற்றி கவர்னரிடம் முதல்வர் ஜெயலலிதா பேசினாரா? எழுத்துப்பூர்மான பரிந்துரை என்றால் அதில் ஜெயலலிதா கையெழுத்திட்டிருந்தாரா?
இந்த விவரங்களைக் கொண்ட நகல் தரவும் என்று கேட்டிருந்தேன். இந்தக் கேள்விக்கு, ‘இது நீதிமன்ற விசாரணைக்குக்கூட உட்பட்டது இல்லை. இதுபற்றி நிறைய தீர்ப்புகள் உள்ளன. எனவே, இந்தக் கேள்வி நிராகரிக்கப்படுகிறது’ என்று பதில் வந்துள்ளது.
முதல்வர் பதவியில் இருப்பதால் அரசாங்கத்தின் சம்பளம் வாங்குகிறார் ஜெயலலிதா. அரசு ஊழியர் ஒருவர் நீண்ட மருத்துவ விடுப்பில் இருந்தால் அந்தப் பணியில் தொடர, அவர் உடல் தகுதியை உறுதி செய்ய மெடிக்கல் போர்டு சான்று கோரப்படுவது போல ஜெயலலிதாவுக்கும் அந்த நடைமுறை கோரப்படுமா? இல்லை என்றால் ஏன்?’ என்று கேள்வி கேட்டிருந்தேன்.
அதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தக் கேள்வியானது, ‘தகவல்’ என்பதற்குக் கீழ் வரவில்லை என்று பதில் கிடைத்துள்ளது.
நான் கேட்டிருந்த எந்த கேள்விகளும் அனுமானம் அடிப்படையில் கேட்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ்தான் கேள்விகள் கேட்டுள்ளேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தட்டிக்கழித்து, ஏதோ ஒன்றை மழுப்பலாகச் சொல்கிறார்கள்.
மருத்துவமனைக்குப் போனேன் என்று கவர்னரே அறிக்கை வெளியிட்டார். முதல்வரைப் பார்த்தீர்களா, இல்லையா என்றால், `இந்தக் கேள்வி அனுமானம்’ என்று பதில் தருகிறார்.
ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் அவமானப்பட்டு வெளியே வந்தவர்தான் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ். அது வெளியே தெரிந்து விடக்கூடாது என்றுதான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழிக்கிறார். உண்மையை மட்டுமே பேச வேண்டிய கவர்னர், பொய் சொல்கிறார். ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்படி பதில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
இந்த 8 கேள்விகளுக்கும் பதில் கேட்டு அப்பீல் மனுவை கடந்த நவம்பர் 25-ம் தேதி அனுப்பி உள்ளேன். அதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டபடி பதில் தரவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்.
முதல்வர் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள எனது சட்டப்போராட்டம் தொடரும் என்று உறுதியாகச் சொன்னார்.
– Vikatan