பருவ மழை பொய்த்து வறண்டுபோன அணைகள்.. தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

damமதுரை: பருவமழை முறையாக பெய்யாததால் தென் மாவட்ட அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரும் தென் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் இந்த எதிர்ப்பார்த்தளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை பெய்ய வேண்டிய சராசரி மழையும் கிடைக்கவில்லை.

இதனால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மதுரையின் குடிநீர் ஆதாரம்

மதுரை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதரமாக உள்ள வைகை மற்றும் பெரியாறு அணைகள் உள்ளன. மதுரை மாநகராட்சியில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

ஒரு நாள் குடிநீர் தேவை

மதுரை மாநகரின் ஒரு நாள் குடிநீர் தேவைக்கு 240 மில்லியன் லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது இதில் பாதியளவு கூட விநியோகம் செய்யப்படவில்லை.

வைகை அணையிலிருந்து கிடைப்பது

வைகை அணையில் இருந்து 3 மாதங்களுக்கு முன்பு வரை குழாய் மூலம் 115 மில்லியன் லிட்டரும் ஆற்றுப்படுகையில் இருந்து 12 மில்லியன் லிட்டரும், காவிரி ஆற்று நீர் 13 மில்லியன் லிட்டர் என மொத்தம் 140 மில்லியன் லிட்டர் கிடைத்து வந்தது.

ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர்

மாநகர் முழுவதும் குடிநீர் சப்ளைக்காக 5 ஆயிரத்து 67 பொதுக் குழாய்களும், 1 லட்சத்து 33 ஆயிரம் தனி இணைப்புகளும் உள்ளன. இதன்மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கிடைத்தது.

4 நாட்களுக்கு ஒரு முறை தான்

அணைகளில் நீர்மட்டம் சரிந்ததை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்து நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தற்போது நீர் இருப்பு

வைகை அணை 23.20 அடியில் நீர் இருப்பு 164 மில்லியன் கனஅடியாக சரிந்துள்ளது. இதில் 110 மில்லியன் கன அடி மண்கலந்த கிடப்பு நீராகும். மீதமுள்ள நீர்மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் 200 கனஅடி நீரில் 133 கன அடி வைகைக்கு வந்து சேருகிறது. இதுவும் இன்னும் சில நாட்களுக்கே கிடைக்கும் நிலை உள்ளதால் மக்கள் மழையை எதிர்ப்பார்த்துள்ளனர்.

பாசிப் படர்ந்த சிற்றாறு

பருவமழை பொய்த்தால் தென்காசி சிற்றாறு பாசிப் படர்ந்து காணப்படுகிறது. தண்ணீர் கரைபுரண்டு ஓட வேண்டிய டிசம்பர் மாதத்தில் தண்ணீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.

tamil.oneindia.com

TAGS: