பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான் காங்கிரசில் இணைந்த சித்தராமையா முதல்வரானது முதல் கட்சிக்குள் புகைச்சல்தான். முந்தைய எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக ஊழல் புகார்களை கிளப்பி குழி பறித்த கதை மறக்கவில்லை என்பதால், சித்தராமையா மிகவும் மெதுவாகத்தான் அரசு பணிகளை கவனித்தார். ஆனால் அது ஆமை வேகமாக மாறிப்போனது கர்நாடக மக்களின் வாழ்நாள் சோகம்.
திட்டங்கள் இல்லை
சித்தராமையா முதல்வரான பிறகு எந்த ஒரு பெரிய திட்டமும் கர்நாடகாவில் செயல்படுத்தப்படவில்லை. எடியூரப்பாவுக்கு நெருக்கமான ஒருவர் நமது நிருபரிடம் இதுபற்றி கேலியாக ஒரு முறை இப்படி கூறினார். “எடியூரப்பா முதல்வராக இருந்தபோது கர்நாடகாவில் ஏகப்பட்ட வளர்ச்சி பணிகள் நடந்தன. எனவே ஊழல் குற்றச்சாட்டுகளும் இயல்பாகவே வந்தன. ஆனால் எந்த பணியுமே சித்தராமையா அரசில் நடைபெறவில்லை. பிறகெப்படி ஊழல் புகார் வரும்” என்றார்.
அவ்வப்போது சர்ச்சை
எதிர்க்கட்சிகள் கேலி செய்வதிலும் உண்மையுள்ளது. பெங்களூர் ஜெயதேவா ஜங்ஷன் முதல், சில்க்போர்ட் ஜங்ஷன் வரையிலான சுமார் 3 கி.மீ தூரம் டிராபிக் நெரிசலால் நிரம்பி வழியும் பகுதி. இவ்விடங்களுக்கு நடுவே பாலம் அமைக்கப்படும் என்று சித்து அரசு தனது முதல் பட்ஜெட்டில் அறிவித்தபோதிலும், இதுவரை ஒரு கல்லை கூட நகர்த்தவில்லை. இப்படி மந்தமாக இருந்தும் கூட, சித்தராமையா கையில் கட்டியுள்ள வாட்ச் விலை ரூ.70 லட்சம்.. என ஊழல் புகாரை கிளப்பிவிட்டார் அவரது அரசியல் எதிரியான தேவகவுடா மகன் குமாரசாமி. ஒருவழியாக கடிகாரத்தை கழற்றி வைத்துவிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சித்தராமையா.
அமைச்சரின் பாலியல் சேட்டை
அதேபோல சமீபத்தில் அவரது அமைச்சரவையிலிருந்த 71வயதான அமைச்சர் எச்.ஒய்.மேட்டி, பாலியல் புகாரில் பதவி விலகியதும் ஆட்சியின் கரும்புள்ளிகளில் ஒன்றாகும். ஆனால் இதுபோன்ற சரிவுகளில் இருந்து அரசை காத்துக்கொள்ள கன்னட கோஷம் அவருக்கு உதவுகிறது.
கை கொடுக்கும் கன்னட கோஷம்
காவிரி பிரச்சினையின்போது, பெங்களூரில் தமிழர் சொத்துக்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டபோது காவல்துறையை கை கட்ட வைத்து வேடிக்கை பார்த்து, கன்னட மக்களின் பாதுகாவலன் என்ற தோற்றத்தை காட்டியவர் சித்தராமையா. இப்போது, அமைச்சர் ஒருவர் அரசு அலுவலகத்தில் வைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ள நிலையில்தான் மீண்டும் மக்களின் உணர்வுகளுக்கு தீனி போடும் சட்டத் திருத்தத்தோடு கிளம்பியுள்ளார் சித்து.
பெங்களூரின் புலம்பல்
அந்த சட்டத் திருத்தம்தான், கர்நாடகாவிலுள்ள அரசு சலுகை பெறும் அனைத்து தனியார் நிறுவன சி, டி பணிப்பிரிவுகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது. “பெங்களூரல்லி எல்லி நோடிதரு, பேறே பாஷேதவரே இதாரே.. கன்னடிகரன்னு எல்லு நோடக்காகல்லா” என்ற வார்த்தை பெங்களூர் நகரில் ஏதாவது ஒரு மூலையில் தினமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மெஜஸ்டிக்கில் பஸ் ஏறி மடிவாளா வருவதற்குள், இந்த வார்த்தையை யாராவது ஒரு கன்னடர் சக கன்னடரிடம் பேசுவதை நீங்கள் கேட்டுவிடலாம். அதாவது “பெங்களூரில் எங்க பார்த்தாலும் வேற மொழி பேசுறவங்கதான் கண்ல படுறாங்க. கன்னடரை எங்கையுமே பார்க்க முடியவில்லை” என்பதுதான் அதன் தமிழ் பொருள்.
வேலை வாய்ப்பில் தமிழர்கள்
பெங்களூரை தமிழர்களும், தெலுங்கர்களும் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே கன்னடர்கள் நினைக்க தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கேற்ப பெங்களூரிலுள்ள எச்.ஏ.எல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள்தான் பெருவாரியாக வேலை பார்க்கிறார்கள். போதாதக்குறைக்கு, ஐடி நிறுவனங்களில் கோலோச்சுவதும் தமிழர்களே. தங்களின் பணிகளை தமிழர்கள் தட்டி பறித்துவிட்டனர் என்ற ஆதங்கம் கன்னடர்களிடம் உள்ளது. ஆனால் திறமைசாலிகளைத்தான் நிறுவனங்கள் தேடுமே தவிற, பாஷையை பார்த்து ஆள் எடுப்பதில்லை என்பதை புரிய வைப்பார் யாருமில்லை.
ஆதங்கத்திற்கு ஒத்தடம்
கன்னடர்களின் இந்த ஆதங்கத்திற்கு மயிலிறகால் வருடும் வேலையை ஆரம்பித்துள்ளது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு. கன்னடர்களுக்குத்தான் வேலை என்ற கோஷத்தை முன்னெடுத்து கன்னட காவலனாக தன்னை காட்டிக்கொள்ள பார்க்கிறார் சித்தராமையா. 2018ன் ஆரம்பத்தில் வர உள்ள தேர்தல் அவரது செயல்பாடுகளுக்கு உரம் போடுகிறது. எதிரணி முதல்வர் வேட்பாளராக நிற்கப்போகிறவர் எடியூரப்பா என்பது சித்தராமையாவுக்கு வசதி. அவர் திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறந்தவர் என்பதை சுட்டிக் காட்டி, தன்னை கன்னட காவலராக காண்பிக்க சித்தராமையா இதுபோன்ற சூழ்நிலைகளை உருவாக்குகிறார் என்கிறார்கள் கர்நாடக அரசியல் நோக்கர்கள்.
பாஜகவுக்கு தர்ம சங்கடம்
சித்தாரமையா அரசின் செயல்பாடு பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்தால், கொந்தளிப்பிலுள்ள மக்களிடம், கன்னட துரோகி என்ற அவப்பெயர் எளிதாக உருவாகிவிடும் என்ற அச்சம் ஒருபக்கம், எதிர்க்காமல் விட்டு சித்தராமையா ஸ்கோர் செய்ய அனுமதிப்பதா என்ற அரசியல் பார்வை மறுபக்கம் அக்கட்சிக்கு. எனவே பாதுகாப்பாக ஒரு வாதத்தை முன்வைக்கிறது பாஜக.
சட்டப்படி செல்லாது
பாஜகவின் பெங்களூர் ராஜாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான சுரேஷ்குமார் அதை உறுதி செய்வதை போல பேட்டியளித்துள்ளார். கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் விருப்பம்தான். ஆனாலும், எந்தவித முன்னேற்பாடும் இன்றி திடீரென சித்தராமையா அரசு இந்த உத்தரவை கொண்டுவருவது தேர்தலுக்காகத்தான். இந்த உத்தரவை கொண்டுவர, 2016வரை ஏன் அரசு காத்திருந்தது?, மேலும், இந்த விதிமுறை நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்படவே வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.