சென்னை: கறிக்கோழி விற்பனையாளர்கள் முதல் கல்வியாளர்கள் வரை போயஸ் கார்டனுக்குப் போய் அதிகாரத்துக்காக பேராசைப்படும் சர்ச்சைக்குரிய மன்னார்குடி கோஷ்டியின் தலைவி சசிகலாவிடம் இருகைகளையும் கூப்பி நின்று கூப்பாடு போடும் கூக்குரல்களால் தமிழகத்தின் மானம் நாள்தோறும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டார்… அந்த தைரியத்தில் ஜெயலலிதாவுக்கு எல்லா காலமும் எல்லாமுமாக இருந்தவர் என கூசாமல் பொய்பேசி சசிகலாவுக்கு மகுடம் சூட்ட முயற்சிக்கின்றன பொன்னையன் வகையறா ஜால்ராக்கள்!
யார் இந்த சசிகலா? சசிகலாவுக்கும் தமிழகத்தின் அரசியலுக்கும் என்னதான் தொடர்பு? ஒன்றுமே இல்லை.. அரசு சொத்துகளை சூறையாடி கொள்ளையடித்தவர் என்ற ஒற்றை தகுதி நிச்சயம் இந்த மன்னார்குடி கோஷ்டியின் தலைவி சசிகலாவுக்கு இருக்கிறது.
சுருட்டுவதற்காக…
ஆட்சி அதிகாரத்தை அதிமுக இனி ஜென்மத்துக்கும் கைப்பற்ற முடியாது; இருக்கிற காலத்தில் முடிந்தவரை சுருட்டலாம் என துடியாய் துடிக்கிற கூட்டமாக அதிமுக நிர்வாகிகள் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றனர்… இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி.
போயஸ் கூப்பாடு
இதற்காகவே தமிழகம் முழுவதும் இருக்கும் லெட்டர்பேடு சங்கங்கள் அனைத்தும் போயஸ் தோட்டத்துக்கு வரவழைக்கப்படுகின்றன; அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக போயஸ் கார்டனில் குவிக்கப்படுகின்றனர்; ஏதோ தமிழகம் இருளில் மூழ்கிப் போனதாகவும் அதை காக்க வந்த ரட்சகியாக சசிகலாதான் இருப்பதைப் போலவும் இருகை ஏந்தி ‘சின்னம்மா நீங்கதான் காப்பத்தனும்’ என கூப்பாடு போடுகிறார்கள்..
ஆனால் மானமும் மனசாட்சியும் கொண்ட அதிமுக தொண்டர்களோ போயஸ் கார்டனுக்கு வெளியே நின்று உரத்த குரலில், யார் இந்த சின்னம்மா? இவருக்கு என்ன போயஸ் கார்டனில் வேலை? என எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாமல் துணிச்சலுடன் கேள்வி கேட்கின்றனர்.
துணைவேந்தர்கள்..
இதில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் என்பவர்களும் இந்த அடிவருடிக் கும்பலாக மாறிப் போய் சசிகலாவிடம் சரணடைந்திருக்கிறார்கள் என்பதை என்னவென்று சொல்ல.. இப்படியான சசிகலா என்ற எந்த ஒரு ஆளுமையுமே அற்ற அரசு சொத்துகளை கொள்ளையடிப்பதை மட்டுமே ஒற்றை கொள்கையாக கொண்ட மன்னார்குடி கும்பலிடம் சரணடைகிறபோது நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் மட்டும் விதிவிலக்காகிவிடுவார்களா என்ன?
நடிகர், நடிகைகள்…
இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கையோடு, போயஸ் தோட்டத்துக்கு போய் ‘சின்னம்மா’ சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்களாம்.. தமிழகத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கைகொட்டி சிரிக்கின்றன!
எத்தனை எத்தனை அரசியல் ஆளுமைகள் உலவிய தமிழ் மண்ணில் முதல்வர் பதவி தேடி வந்தபோதும் அதை எட்டி உதைத்த பெரியார்கள் வாழ்ந்த மண்ணில்… இப்படித்தான் முதல்வராக இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டிய காமராஜர்கள் மண்ணில் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்து கொண்டிருப்பதை எப்படித்தான் சகிக்க முடியுமோ?
கோயிந்தா! கோயிந்தா!