மும்பை: நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும், டிச., 30 ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவாது:
காலம் கனிந்துவிட்டது
நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின் நடவடிக்கையால் நீங்கள் பயப்பட வேண்டி வரும். நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது. இது துாய்மை புரட்சிக்கான நேரம்.
50 நாட்களுக்கு பிறகு (நவ., 8 லிருந்து) நேர்மையான மக்கள் அனுபவித்து வரும் சிரமங்கள் குறைய துவங்கும். அதேசமயம், நேர்மையற்றவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்னைகள், பாதிப்புகள் அதிகரிக்கும்.
வெற்றி கிடைக்கும் வரை…
நவ.,8 ம் தேதி கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாங்கள் மிகப்பெரும் முடிவை எடுத்தோம். இந்த முடிவால், 125 கோடி இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதேசமயம், அவர்கள் என்னை ஆதரிப்பதை நிறுத்தவில்லை. வெற்றி கிடைக்கும் வரை இந்த கறுப்பு பண போர் தொடரும்.
டிச., 30க்கு பிறகு…
ஊழல்வாதிகள் அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறார்கள். கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வங்கி அதிகாரிகளை பயன்படுத்துவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருவராக பிடிப்பட்டு வருகிறார்கள். டிச., 30 ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் பேசினார்.
-http://www.dinamalar.com