தஞ்சை: கூலியாக கொஞ்சம் நெல்லை கூட்டிக் கேட்டதற்கு பலியானது அந்த 44 உயிர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கீழ்வெண்மணியில்தான் அந்த கொடுமை நடந்தேறியது. கோபால கிருஷ்ண நாயுடு பண்ணையாரால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டு இன்று 48 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாட்டில் காவிரி பாயும் தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயம்தான் உயிர் மூச்சு. என்றாலும் நிலங்கள் எல்லாம் பெரும் பண்ணையார்களிடம் இருக்கும் என்பதுதான் எழுதப்படாத நியதி. மக்கள் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்க, பண்ணையார்கள் அவர்களை அடிமைகளாக நடத்த என்ற ஜாதிய மற்றும் பண்ணைய அடிமை முறை ஏற்றத் தாழ்வில் கட்டப்பட்ட இந்தச் சமூகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்பது கூட பெரும் குற்றம்தானே?
கூலி நெல்லை சேர்த்துக் கொடு என்று கேட்ட மக்களை கட்டி வைத்து அடித்து உதைத்தது நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடுவின் பண்ணையார் தர்பார். போதாத குறைக்கு கிறிஸ்துமஸ் தினமாக டிசம்பர் 25ம் தேதி நாட்டுத் துப்பாக்கியுடன் வெண்மணி கிராமத்திற்கு நுழைந்த அந்த பண்ணையாரின் கும்பல், மக்களை துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தினார்கள்.
பயந்து போன பெண்களும், குழந்தைகளும் ஓடிச் சென்று குடிசைக்குள் ஒளிந்து கொண்டனர். 20 பெண்கள், 19 குழந்தைகள் என குடிசைக்குள் இருந்த 44 பேரையும் அப்படியே கொளுத்தி சாம்பலாக்கி செரித்துவிட்டது பண்ணைஅடியாள் ஜாதிய ஒடுக்கு முறை.
பச்சிளம் குழந்தைகள் என்றும் பெண்கள் என்றும் பாராமல் தாழ்த்தப்பட்ட தலித் மக்களை கொன்ற உயர்ஜாதி கோபால கிருஷ்ண நாயுடு சட்டத்தால் வேண்டுமானால் தண்டிக்கப்படாமல் இருக்கலாம்.
ஆனால் உரிய முறையில் அதற்கான பாதிலை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வழங்கப்பட்டது என்பது வரலாறு. 44 பேரை எரிந்துக் கொன்றுவிட்டோம் என்ற நிலக்கிழார்களின் எண்ணங்களில் மண்ணைப் போட்டு, இன்றும் எரிந்த நெருப்பின் அணையாத கங்குகளாக, தியாக சின்னங்களாக கீழ் வெண்மணியில் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கூலி உயர்வு கேட்டு மரித்த போராளிகள். அவர்கள் உயிர் நீத்த 48வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கீழ் வெண்மணியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்து வருகிறார்கள்.