டெல்லி: வடமாநிலங்காளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் ரயில் மற்றும் விமானங்கள் புறப்படுவது மற்றும் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
விமானப் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6 சர்வதேச விமானங்களும், 5 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. ஒரு உள்நாட்டு விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனிமூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரயில்கள் மற்றும் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 52 ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஏராளமான ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்பதால் ஜனவரி 15ஆம் தேதி வரை 70 ரயில்களின் போக்குவரத்தை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பனிமூட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டத்தால் சாலை போக்கு வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால் விடிந்த பின்னரும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்கின்றனர். பனிமூட்டத்துடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காலை 10 மணிக்கு மேல் வரை நீடிக்கும் பனிமூட்டம் மற்றும் கடும் குளிரால் காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் நெருப்பு மூட்டங்களை உருவாக்கி குளிரை சமாளித்து வருகின்றனர்.
-http://tamil.oneindia.com