கர்நாடகத்து சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக்கினால்…

Manசென்னை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு முன்பிருந்தே இந்தக் குழப்பம் இருந்து வந்தது. தற்போது அடுத்த ஆளுநர் யார் என்பதில் புதிய குழப்பம் கிளம்பியுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவரான சங்கரமூர்த்தியே அடுத்த தமிழக ஆளுநர் என்று பேச்சு அடிபடுகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதிமுக – திமுக தவிர அத்தனைக் கட்சிகளும் இதை எதிர்க்க ஆரம்பித்துள்ளன.

ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரை, தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கர்நாடக சட்டசபையில் முழங்கிய ஒருவரை எப்படி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்க முடியும் என்று. தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வித்யாசாகர ராவ்

ரோசய்யா ஓய்வு பெற்ற பின்னர் நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்காமல் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. காரணம்தான் புரியவில்லை. மகாராஷ்டிராவின் ஆளுநராக உள்ள வித்யாசாகர ராவைக் கூட்டி வந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நடமாட விட்டுள்ளது மத்திய அரசு.

ஜெ. மறைவுக்குப் பின்னர்

முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் வித்யாசாகர ராவ் மூலமாக தமிழக ஆட்சி நிர்வாகத்திலும் பாஜக தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதை பாஜக தரப்பு மறுத்து வந்தாலும் கூட அதுதான் நிதர்சனம் என்று விவரம் தெரிந்தவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். கண் கூடாகவே மக்களும் இதைப் பார்த்து வருகின்றனர்.

நிரந்தர ஆளுநர்

இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கென தனியாக ஒரு ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். அந்த பதவிக்குத்தான் சங்கரமூர்த்தி பெயர் அடிபடுகிறது. இவர் ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். ஷிமோகாவைச் சேர்ந்தவர்.

80 முதல் பாஜக

1980ம் ஆண்டு வரை ஆர்எஸ்எஸ், ஜன் சங் என வலம் வந்த இவர் பின்னர் பாஜகவில் செயல்படத் தொடங்கினார். மாநில பொதுச் செயலாளர் பதவியையும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்துள்ளார். அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தண்ணீர் தர கடும் எதிர்ப்பு

கர்நாடக சட்டசபையில் காவிரிப் பிரச்சினை தொடர்பான விவாதம் எப்போது வந்தாலும் தமிழகத்திற்கு எதிராக உரத்து எழும் முதல் குரல் சங்கரமூர்த்தி குரலாகவே இருக்கும். அந்த அளவுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் தரக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் கர்நாடக தலைவர்களில் இவரும் முக்கியமானவர்.

தி.க., மணியரசன்

இப்படிப்பட்டவரை, தமிழக எதிர்ப்பு உணர்வு கொண்ட ஒருவரை தமிழகத்தின் ஆளுநராக நியமித்தால் அது விபரீதமாகவே முடியும் என்று தமிழக கட்சிகள் பலவும் கருத்து தெரிவித்துள்ளன. அதிமுக, திமுக, வைகோ உள்ளிட்டோர் வாய் திறக்காமல் இருந்தாலும் கூட தி.க, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறையும் வார்னிங்

அதேபோல மத்திய உளவுத்துறையும் சங்கரமூர்த்தி நியமனத்தால் தமிழகத்தில் பிரச்சினை வரும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளதாம். சங்கரமூர்த்தி நியமனத்தால் கடும் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடிக்கலாம் என்று எச்சரித்துள்ளதாம்.

தமிழக பாஜக தர்மசங்கடத்தில்

அதேசமயம், தமிழக பாஜகவும் சங்கரமூர்த்தி நியமிக்கப்பட்டால் தர்மசங்கடம் ஏற்படும் என கருதுகிறதாம். தமிழகத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வரும் ஒருவரை தமிழகத்திற்கே ஆளுநராகப் போடுவது லாஜிக்காகவும் சரியாக இருக்காது என்ற கருத்தும் மத்திய அரசுக்குப் போயுள்ளதாம்.

அவர் இங்கு.. இவர் அங்கு

எனவே சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமிக்காது என்று கருதப்படுகிறது. மாறாக தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள ராவையே நிரந்தர ஆளுநராக்க மத்திய அரசு முடிவெடுக்கலாம் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்தால் சங்கரமூர்த்தி ராவ் இடத்திற்குப் போகலாம். அதாவது மகாராஷ்டிராவுக்குப் போகக் கூடும் என்று சொல்கிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: