இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா விடம் கேட்கிறது சீனா

agni-5-missileபெய்ஜிங் : இந்தியா அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் கேட்கவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

அணுஆயுதங்களை சுமந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி 5 ஏவுகணையை ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் இந்தியா திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ஏவுகணையால் சீனாவின் எந்தப் பகுதியிலும் இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. சீனாவை அச்சுறுத்தும் வகையில் இந்த அக்னி 5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் கேட்க இருப்பதாக கூறினார்.

அணுஆயுதங்களை சுமந்துச் சென்று கண்டம் விட்டு கண்டம் விட்டு பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை இந்தியா தயாரித்திருக்கும்பட்சத்தில், அதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களில் தெளிவான விதிகள் உள்ளன. அந்த விதிகளுக்கு உள்பட்டதாக அக்னி-5 ஏவுகணை சோதனை இருக்கும் என்று சீனா நம்புவதாக அவர் கூறினார்.

இந்தியாவுடன் சீனா அமைதியையே விரும்புவதாக கூறிய அவர், தெற்காசிய நாடுகளுடன் அமைதி, அபிவிருத்தி ஏற்பட்டு நிலைத்தன்மை நிலவ வேண்டும் என்பதை சீனா விரும்புவதாக ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார். அக்னி-5 ஏவுகணையை இந்தியா சோதித்ததும், சில ஊடகங்கள் சீனாவை குறிவைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தன. இந்த ஏவுகணைச் சோதனையில், இந்தியாவுக்கு இருக்கும் உள்நோக்கங்களை அறிய வேண்டுமெனில், அதுகுறித்து அந்நாட்டிடம்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சீனாவும், இந்தியாவும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாக உள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சீனா விருப்பமாக உள்ளது. இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

அதேபோல், ஏவுகணை சோதனை தொடர்பான விவகாரத்தில் தன்னிச்சையாக வதந்திகளை பரப்புவதையும், தனது கருத்துகளை திணிப்பதிலும் ஊடகங்கள் ஈடுபடக் கூடாது என்றும் ஹுவா சுன்யிங் கேட்டுக்கொண்டார்.

-http://tamil.oneindia.com

TAGS: