இந்தியப் படகுகளை அரசுடமையாக்கிய இலங்கை அரசு… அமைதி காக்கும் இந்திய அரசு!

tamilnadu_fishermanஇலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 122 படகுகள் அரசுடமையாக்கப்படும் என இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பதற்கும், கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காக்கும் இந்திய அரசுக்கும் தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

படகுகளையும், மீனவர்களையும் மீட்டு தர கோரி மீனவர்கள் போராடுவதன் விளைவாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட்டு வந்தன.

ஆனால் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றது முதல் சிறைபிடிக்கப்படும் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

மீனவர்களும் தங்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை மீட்டு தர கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 122 படகுகளையும் அதில் இருந்த உபகரணங்களையும் இலங்கை அரசு அரசு உடமையாக்கி விட்டதாகவும்.

இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட படகுகளையோ, மீன்பிடி உபகரணங்களையோ திருப்பி தர மாட்டோம் எனவும் இலங்கை மீன்வள துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தியா – இலங்கை மீனவர்களிடையே நிலவும் மீன்பிடி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாளை (டிசம்பர் 31) டெல்லியில் இருநாட்டு அரசு உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இதனை தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி கொழும்பில் இது தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டமும் நடக்க உள்ளது.

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ள நிலையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டு விட்டதாக இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ் ‘‘எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை ‘சுடுவோம்’ எனவும், ‘அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன் இந்திய மீனவர்களின் படகுகளை பறித்து அரசுடமையாக்குவோம்’ எனவும் இலங்கை மீன்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு இந்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை. குறைந்த பட்சம் அந்த அமைச்சருக்கு கண்டனம் கூட தெரிவிப்பதில்லை.

இதன் விளைவாகத்தான் இலங்கை தான் பிடித்து வைத்துள்ள படகுகளை அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டதாக தற்போது அறிவித்திருக்கிறது.

இலங்கை அரசின் இந்த செயலுக்கு மத்திய அரசு உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். உடனடியாக எங்களது படகுகளையும், சிறையில் உள்ள மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது உரிமையான கச்சதீவில் நடக்கும் திருவிழாவிற்கு அனுமதி பெற்று தரும் மத்திய அரசு மீனவர்களை வாழ வைக்கும் மீன் பிடி தொழிலுக்கான உரிமையை பெற்று தர ஏன் மறுக்கிறது என தெரியவில்லை’’ என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்க செயலாளர் சேசுராஜ் ‘‘மீனவர்கள் தங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தியதன் மூலம் வாங்கிய படகுகளை இலங்கை அரசு எல்லை தாண்டி வந்ததாக கூறி அரசுடமை ஆக்கியிருக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இலங்கை அரசின் இந்த துணிச்சலுக்கு மத்திய அரசின் மெத்தன போக்கே காரணம். இலங்கை அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசின் நிலை எங்களுக்கு வேதனையை தருகிறது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் எங்களது கடல் எல்லை குறைந்து போனது.

குறைந்த கடல் பரப்பை வைத்து கொண்டு நாங்கள் எல்லை தாண்டி வருவதாக சொல்லி எங்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை அபகரிக்க முயல்வதை ஏற்க முடியாது.கச்சதீவினை மீட்டு கொடுத்து விட்டால் நாங்கள் ஏன் எல்லை தாண்டி செல்ல போகிறோம்.

இலங்கை அரசின் பிடியில் உள்ள 122 படகுகளும் அரசின் உதவியுடனோ மானியத்தின் மூலமோ வாங்க வில்லை. வட்டிக்கு கடன் வாங்கி, எங்கள் வேர்வையை உழைப்பாக்கியதன் மூலம் வாங்கப்பட்ட படகுகள் அவை. இந்த படகுகளை மத்திய அரசு உடனடியாக மீட்டு தர வேண்டும்.

அவ்வாறு மீட்க முடியவில்லை எனில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்து வரும் நிதி உதவிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படும் நிதியினை எங்களது படகுகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மத்திய அரசு இதனை செய்ய தவறினால் மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

இலங்கை அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து இலங்கை இந்திய மீன்பிடி நலத்துறை ஆலோசகர் அந்தோணிமுத்து கூறுகையில் ‘‘இலங்கை மீனவர்களை பாதிக்கும் இந்திய மீன்பிடி படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மாகாண மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது.

எனவேதான் இந்திய மீனவர்களை மட்டும் விடுவிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய மீனவர்களை விடுவிக்கும் அதே வேளையில் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்திய சிறையில் உள்ள இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்.

இலங்கை அரசால் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களது படகுகள் ஏலம் விடப்படும். அந்த ஏலத்தில் பங்கேற்று ஏல தொகையினை செலுத்தி இந்திய மீனவர்கள் தங்கள் படகுகளை மீட்டு செல்லலாம்’’ என தெரிவித்தார்.ஆழ்கடல் மீன்பிடிப்புக்கும் வழியில்லை.

கரையோர மீன் பிடிப்புக்கும் அனுமதியில்லை. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடித்தாலும் தொல்லை. எப்படித்தான் வாழ்க்கை நடத்துவான் மீனவன்?

– Vikatan

TAGS: