தமிழகம் முழுவதும் வறட்சி: அனைத்து மாவட்ட அறிக்கைகளும் நாளை தாக்கல்

farmer1தமிழகம் முழுவதும் காணப்படும் வறட்சி நிலைமைகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த அறிக்கைகள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட உள்ளன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான நிவாரண நிதிகளும், உதவிகளும் அளிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மனமுடைந்து வருகின்றனர்.

கள ஆய்வுப் பணிகள்: போதிய மழையின்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட பயிர்கள்களின் அளவு, எத்தனை ஏக்கர் பாதிப்பட்டிருக்கிறது, மரணம் அடைந்த விவசாயிகள் எத்தனை பேர் என்பது உள்பட பல்வேறு விவரங்களை தமிழக அரசு அமைத்த குழுவானது சேகரித்துள்ளது.

அறிக்கை தயாரிக்கும் பணி: கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கள ஆய்வில் பங்கெடுத்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் இந்த ஆய்வறிக்கையை தயாரிக்க வழிகாட்டியுள்ளனர்.
நாளை அளிப்பு: தமிழகத்தில் வறட்சி நிலைமை குறித்து மாவட்டந்தோறும் தயார் செய்யப்பட்டு வரும் ஆய்வறிக்கைகள் திங்கள்கிழமையன்று (ஜன. 9) முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட உள்ளது.

இந்த ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண நிதிகள், உதவிகள் அளிக்கப்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்புகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மேலும், வறட்சி குறித்த ஆய்வறிக்கைகள் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு போதுமான நிவாரண நிதியுதவிகள் கோரப்பட உள்ளன.

சென்னையில் குடிநீர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் போன்ற மாற்று ஏற்பாடுகள் குறித்த அறிவிப்புகளையும் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, கிருஷ்ணா நீர் கோரி ஆந்திரத்துக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: