அமெரிக்காவையே அதிர வைத்த தமிழர்கள்..!

usa_manjuviradduஅமெரிக்கத் தமிழர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராடங்களாக அமைந்து விட்டது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட தமிழர்கள் வசிக்கும் அனைத்து நகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுந்துள்ளன.

அட்லாண்டாவில் ஆரம்பம்

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அட்லாண்டா இந்திய தூதரகத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் தூதர் நாகேஷ் சிங்கை சந்தித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு வழங்கினர்.

மிகவும் பொறுமையோடு கோரிக்கையை கேட்டுக் கொண்ட தூதர் நாகேஷ் சிங், தமிழர்களின் நியாயமான உணர்வைப் புரிந்து கொள்வதாகவும், அதை அரசுக்கு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர்கள் கோபால், சுவாமிநாதன் உள்ளிட்டவர்கள். 2018ம் ஆண்டிற்குள் ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை 5 மணி அளவில் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து இந்திய அரசே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு என்று முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு அட்லாண்டா தமிழ் சங்கம் ஆதரவைத் தெரிவித்து இருந்தது.

வட கிழக்கு மாநிலங்கள்

வாசிங்டன் டிசி, நியூ ஜெர்ஸி (ஹைட்ஸ்டவுண்), பால்டிமோர் (காக்கிஸ்வில்) உள்ளிட்ட வட கிழக்கு நகரங்களில் ஏராளமான தமிழர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அந்தந்த ஊர்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களும் ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து சங்கத்தின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

காக்கிஸ்வில் நகரில் நடந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏன் உருவாக்கப்பட்டது. நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டின் பங்களிப்பு என்ன என்பதை உயிர் சுழற்சி என்ற பட விளக்கத்துடன் விவரித்தார்கள். இது குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருந்தது.

நியூயார்க் நகரத்தின் மையப்பகுதியான டைம்ஸ் ஸ்கொயரில் நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து போராட்டம் நடந்தது.

நியூயார்க் மாநிலம் ஆல்பனி நகரில், ஆல்பனி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. கனெக்டிக்கட் மாநிலத்தின் ஃபார்மிங்டன் நகரில் நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர்.

கடும் குளிராக இருந்தாலும்,வேட்டியில் அனேகம் பேர் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.

மத்திய மேற்கு பகுதிகள்

ஒஹாயோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரில் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நெப்ராஸ்கா மா நிலத்தின் ஓமஹா நகரில் உள்ள தமிழர்கள் திரண்டு வந்திருந்து ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

குறைந்த அளவில் தமிழர்கள் வசிக்கும் இந்த நகரில் ஏராளமான தமிழர்கள் வந்திருந்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற மினியாபோலிஸ் ஆர்ப்பாட்டம், வெள்ளைப் பனி சூழ்ந்த இடத்தில் நடைபெற்றது.

கைகளில் க்ளவுஸ், முழு நீள கோட் அணிந்து சிறுவர்களும் பங்கேற்றனர். அந்த குளிரிலும் பாரம்பரிய வேட்டி அணிந்து வந்து தமிழர் அடையாளத்தை நிலை நாட்டியவரும் உண்டு.

தெற்கே டெக்சாஸில் அதிர்ந்த அரங்கம்

டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் , மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சனிக்கிழமை பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குளிரும் மழையுமாக இருந்த போதிலும் சுமார் 1000 பேர் வருகை தந்திருந்தனர். ஜல்லிக்கட்டு தடை பற்றி விரிவாக அறிவிக்கப்பட்டு, அனைவரும் ஆதரவு தருவீர்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஒருமித்த குரலில் கூட்டத்தினர் ஆமோதிக்க, தொடர்ந்து ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பட்டது.

பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக கோரிக்கை மனுவில் கையெழுத்துகளும் பெறப்பட்டன மேலும் தனியாக ஜல்லிக்கட்டு ஆதரவு நிகழ்ச்சிக்காகவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

டல்லாஸில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய விழிப்புணர்வு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

தெற்கே ஆஸ்டின் நகரிலும் தமிழர்கள் திரண்டு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அடுத்துள்ள சான் அண்டோனியா நகரிலும் விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது.

மேற்கே சான்ஃப்ரான்சிஸ்கோவிலும் சியாட்டலிலும்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியான கலிஃபோர்னியாவின் சான்ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

பீட்டாவையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்காவின் வடமேற்கு நகரமான சியாட்டல் மாநகரப்பகுதியிலும் தடையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

சியாட்டல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தலைவர் உதயகுமார், மக்கள் தொடர்பாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 50 குழந்தைகள் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.

இந்த அறவழிப் போராட்டம் மகாத்மா காந்தி சிலை அருகில் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அந்த வழியாக வந்த அமெரிக்கர்களும் ஜல்லிக்கட்டு பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் வாட்டிய போதிலும், மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்திருந்தாலும் 250 திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னும் ஏராளமான ஊர்களில் தமிழர்கள் கூட்டமாக திரண்டு தங்கள் ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்து இருந்தனர்.

வெள்ளி முதல் ஞாயிறு வரை வார இறுதி முழுவதிலும் அமெரிக்கத் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் கூட்டங்கள் நடத்தி உணர்வுப் பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அமெரிக்கத் தமிழர்களிடம் புதிய எழுச்சி உருவாகியுள்ளதையும் காண முடிகிறது. இரண்டு தமிழர்கள் உரையாடிக் கொண்டால் ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சு தான் முதன்மையாக இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களிலும் தமிழர் அடையாளம் என்ற ஒரு மித்த குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு மீதான தடை சாதி, மதம் வேறுபாடுகள் களைந்து தமிழர் என்ற அடையாளத்தை மீட்டெடுத்துள்ளது என்றால் மிகையல்ல.

– One India

TAGS: