ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் மாணவர்கள் போராட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள்.
சந்தடி சாக்கில் பாஜக எம்பி தருண் விஜய்யும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்திருக்கிறார். தமிழகத்தில் ஹெச்.ராஜா என்கிற பாஜக தலைவரும் காளை மாட்டை அழிவித்துவிட்டு போராட்டம் செய்திருக்கிறார். இவர்களின் இந்தப் போராட்டம் தொடர்பில் சில கேள்விகள் எழுகிறது.
நாம் ஒரு ஓட்டலுக்குப் போகிறோம். நமக்கு மசால் தோசை தேவை. சர்வரிடம் ஒரு மசால் தோசை என்று ஆர்டர் கொடுக்கிறோம். அந்த சர்வர் உடனே தோசை மாஸ்டரை நோக்கி “ஒரு மசால் தோசை போட்டுக்கோ” என்று ஆர்டர் கொடுக்கிறார். இதையடுத்து, தோசை மாஸ்டர் என்ன செய்ய வேண்டும்? தோசைக் கல்லில் மாவு ஊற்றி மசால் தோசை போட வேண்டும்.
ஆனால், அந்த தோசை மாஸ்டரும் “ஒரு மசால் தோசை போட்டுக்கோ” என்று சத்தம் போட்டால் என்ன அர்த்தம்? தோசை ஊற்றும் வசதியும் வாய்ப்பும் அந்த பணியும் தோசை மாஸ்டருக்கு உரியது தானே!
ஜல்லிக்ட்டுக்காக தமிழகத்தில் மாணவர்கள் போராடுகிறார்கள். ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும், பாமகவும் இன்னபிற கட்சிகளும் போராடுகின்றன. இவர்கள் அத்தனை பேரும், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் நோக்கி ‘அவசரச் சட்டம்’ (Ordinance) ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அப்படி அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஜல்லிக்கட்டு வழக்கால் எந்த தடையும் இல்லை என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால், மோடி அரசு அசைவதாகத் தெரியவில்லை. இத்தனை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதிக்கிறது. ஆனால், அதே சமயத்தில் தருண் விஜய்யும் ஹெச். ராஜாவும் போராட்டம் நடத்துவது யாரை நோக்கி? செய்து முடிக்க வேண்டிய இடத்தில் இருப்பதே பாஜகதான். ஆனால், பாஜகவினரே போராட்டம் செய்வதுபோல் நடிக்கிறார்கள்.
தமிழர்கள் என்ன அத்தனை இளிச்சவாயர்களா? உங்களின் இரட்டை வேடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாதா என்ன தமிழர்களால்? எனவே ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையும் ஒருமுகப்படுத்தப்பட்டு மோடி அரசை நோக்கி நம் குரல் இருக்க வேண்டும். மாநில அரசும் அதன் முதலமைச்சரும் இயன்ற அளவு ஒத்துழைப்புத் தருகிறார்கள்.
ஆனால், உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி குட்டிக் கரணம் போடுவது மத்திய மோடி அரசுதான்! ஆனால், காவிரி நீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபோதும் அதை மதிக்காமல் தமிழர்களுக்கு துரோகம் செய்தது பாஜக! பாஜகவின் தமிழர் விரோதப் போக்கையும், அதன் இரட்டை வேடத்தையும் புரிந்துகொள்ளாமல் போவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! அறிவிலும் வீரத்திலும் சிறந்தவர்கள் தமிழர்கள்!
– வெற்றிகொண்டான் (முகநூல் பதிவு)