ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி அரசியல்..!

jaalliதற்பொழுது எழுச்சி பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டமானது மக்களின் ஒட்டுமொத்த கடந்த கால கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

காவேரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, சென்னை வெள்ளப் பேரழிவு, ஈழப் போராடத்தின் தோல்வி, தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்து காரணிகளின் பின்னிருக்கும் கோபத்தின் ஒரு வகை எழுச்சியாகவுமே இதனைப் பார்க்க வேண்டும்.

இதன் பின்னால் உள்ள நுண் அரசியலை மக்கள் உணர்ந்து கொண்டு, இந்த எழுச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துதல் பற்றி சிந்திப்பது மிக மிக முக்கியமானதொன்றாகும்.

தொண்ணூறுகளில் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தம் தொடங்கிய காலத்தில் இருந்தே சாதாரண மக்களின் கோபம் கூடுதல் வளர்ச்சி காணத் தொடக்கி விட்டது.

காப்ரேட் நிறுவனங்களின் வருகை அதனால் விவசாயிகளுக்கு மற்றும் உள்ளூர் கைத் தொழில்களுக்கு ஏற்பட்ட நட்டம், விவசாயிகளில் தற்கொலை, விளைச்சலின்மை,விலைவாசி உயர்வு, காப்ரேட் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பு போன்றன சாதாரண அடித்தட்டு மக்களை கோபம் கொள்ளச் செய்தன.

அந்தக் கோபத்தின் ஒரு வகை பரினாமமே இன்றைய இந்த மக்கள் புரட்சி ஆகும். மாட்டை வைத்து நடாத்தப்படும் இந்த அரசியல் தமிழகத்தில் காலூன்ற பாஜக கையில் எடுத்துக் கொண்ட ஒரு ஆயுதமாகும்.

மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் இந்து தத்துவ நடவடிக்கைகளை கையிலெடுத்து அதனை குழப்பி அதன் ஊடாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு அல்லது கலவரத்தை ஏற்படுத்தி அதன் பின்னர் தமது கட்சியினை காலூன்ற வைப்பது, மக்களுக்கு நெருக்கமான கலாச்சார அடையாளங்களை அபகரித்து இந்துதத்துவம் நோக்கி திருப்புவது, இதுதான் பாஜாகாவின் வாக்கு வெல்லும் திட்ட மிடல்கள்.

குஜராத் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, பிகாரில் இந்துதத்துவ மேலாண்மை போன்றவற்றின் பின்னணி அரசியல் என்பதும் இதுதான்.

விலங்குகள் நல வாரியத்தின் மாடுகள் மீதான திடீர் அக்கறை, மாட்டுக்கறி தடை, ஜல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு பின் சேர்த்தமை என்பன ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படும் பாஜாகாவின் மோடி அரசின் தந்திர அரசியல் ஆகும்.

ஆகவே மக்கள் இதன் பின்னால் உள்ள அரசியலின் உண்மைத் தன்மையை உணர்ந்துகொண்டு மோடியின் வலைக்குள் சிக்காமல் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

இல்லையேல் ஏதேனும் ஒரு நாசாகார விளைவுகளை ஏற்படுத்தி இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் மோடியின் மக்கள் விரோத அரசு.

அதே நேரத்தில் தடைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் ஊடாக மிருக வதையை நாம் ஆதரிக்கவில்லை. ஜல்லிகட்டு மட்டுமல்ல மிருகத்தை பண்ணையில் வைத்திருப்பது கூட ஒரு வகை மிருகவதை தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறைசிக்காக மாடு வெட்டப்படுவது கூட ஒரு வகை மிருக வதைதான். அனால் அதை தடை செய்து பலரது வாழ்வாதாரத்தை சிதைக்க முடியாது. இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதையும், ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் சித்திரவதைப்படுத்தப் படுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது.

ஆனால் இங்கும் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்படிருப்பதை நாம் அவதானிக்க வேண்டும். இது தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, மரபு என்ற காரணங்களை மட்டும் முதன்மைப்படுத்துவதும் தவறே

ஜல்லிக்கட்டு எல்லா நகரங்களிலுமா நடக்கிறது? கலாச்சார அடையாளம் வாழ்வாதாரத்துடன் இணைந்திருக்கும் போது அது காத்துக்கொள்ளப்படுகிறது.

இதே கலாச்சார அடையாளம் வாழ்வாதாரத்திற்கு எதிரியாக இருப்பின் எதிர்க்கப்படும் அல்லது தேவைப்படாமல் வரலாற்றில் மறைந்து போகும்.

ஜல்லிக்கட்டை நடத்துவதற்குரிய மக்களின் உரிமைக்காக நாம் போராடுவது சரியே. தமிழ் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு விசயத்தை எழுந்தமானதாக தடை செய்ய மத்திய அரசுக்கு நீதி மன்றத்துக்கு உரிமையே இல்லை.

இது மக்கள் வரலாறு சார்ந்த விடயமாகவும் இருக்கிறது. தடை என்பது அரசின் கொடும் கரம். அந்தக் கரத்தின் அடி ஒட்டு மொத்த மக்கள் மேலும் விழும்போழுது அவர்கள் எழுச்சி கொள்வது தவறில்லை.

மிருக வதைக்கு அப்பாற்பட்ட அரசியல் இங்கிருப்பதை இங்கு கவனிக்க வேண்டும். தமிழர்கள் எல்லாம் மிருக வதை விரும்பும் காட்டு மிராண்டிகள் என்பதுபோல் சிலர் வாதிப்பது நகைப்புக்கிடமானது.

மிருக வதைக்கு எதிராக இயங்குவதாக சொல்லும் விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற மக்கள் சார்ந்த அமைப்புகள் அல்ல. அவை அரசுகள் சார்ந்த மிகப் பெரும் நிறுவனத்தின் நலம் சார்ந்த அமைப்புகளாகும்.

மிருகங்களில் அக்கறை உள்ளவர்கள் வழங்கும் பணத்தை சுருட்டி எடுக்கும் இவர்கள் செய்வது என்ன ? பண்டங்களை நுகரும் சாதாரண மக்கள் வதை எதிர்பாளர்கள்.

தமது பண்டங்கள் நுகர்தலுக்குரியவை என நிறுவும் போட்டியால் பல நிறுவனங்களும் அரசுகளும் பீட்டா போன்ற அமைப்புகளுக்கு பண உதவி செய்கின்றன.

இந்தியாவில் இது வேறு பரிணாமம் கொள்கிறது. அங்கு இந்துதத்துவ அதிகாரம் இதன்மூலம் தன்னை நிறுவிக்கொள்ள முயல்கிறது.

இவ்வாறன அமைப்புகள் மனிதர்கள் கொத்துக் கொத்தாக சாகும்போது கவலைப்படாமல் மாடுகள் சாகும்பொழுது மட்டும் கவலைப்படுகின்றன. இந்தியா முழுவதும் மாடுகள் மட்டுமல்லாமல் எத்தனையோ விலங்குகள் வதைக்கப்படுகின்றன.

அது பற்றி கரிசனை ஏதும் கொள்ளாமல் மாட்டை பற்றி மட்டும் கவலை கொள்ளும் இவ்வமைப்புகளின் நோக்கம் உண்மையாகவே மாட்டைப் பற்றியதல்ல என்பது தெளிவாகின்றது.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்றனவற்றின் ஊடாக மாட்டை புனிதப்படுத்தும் பாஜக அரசின் உள்நோக்கம் என்பது பிராமண அரசியலை நிலைநிறுத்தல், மாட்டுக்கறி உண்ணும் தலித் மக்களுக்கு எதிரான போக்கை விதைத்தல், இதன் ஊடாக இந்துத்ததுவத்தை தமிழ் நாட்டில் வேரூன்றச் செய்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுதல் ஆகும்.

இதுபோன்ற மக்கள் விரோத அரசு தமிழ்நாட்டில் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அதற்கு மக்கள் இன்னும் இன்னும் ஒருங்கிணைந்து போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும்.

தமிழ் நாட்டு மக்கள் போராட்டத்துக்கு தயாராக உள்ளனர். அதன் தற்போதைய இந்த மக்கள் திரட்சி என்பது தமிழ்நாட்டு அரசியல் புதிய திசையில் பயணிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதைக் காட்டுகின்றது. ஆனால் அதன் தற்போதைய பிரச்சனை தலைமைப் பற்றாக்குறையே.

அரசியல் தெளிவுடைய சரியான தலைமை இல்லாதவிடத்து இந்தப் போராட்டம் சிதறிவிடக்கூடும் அல்லது ஏதேனும் ஒரு வலதுசாரி கட்சியினை அல்லது அரசியல்வாதியினை நோக்கி சாயக் கூடும்.

அது பின்னர் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தப்படக்கூடும். அவ்வாறில்லாமல் இந்தப் போராட்டமானது அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும், அமைப்பு மயப்படுத்தப்படவேண்டும்.

அதன் ஊடாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுதல் வேண்டும். இல்லையெனின் நோக்கங்கள் ஏதும் நிறைவு பெறாமல், முழுமையான வெற்றி எதுவும் பெறாமல் வெறுமனே அனைவரும் கூடிக் கோஷமிட்டு பின்னர் கலைதல் போன்றதாகிவிடும்.

இங்கு திரண்டு இருக்கும் மக்கள் திரட்சி என்பது மக்களின் பலத்தை காட்டும் சக்தியாக திறந்திருக்கிறது. இது அதிகாரத்தின் பலத்தை எடுக்கும் சக்தியாக மாற வேண்டும்.

இந்த திரட்சி அமைப்பு மயப்படும்போதுதான் இப்போராட்டமானது அடுத்த கட்டத்தை நோக்கி நகரக்கூடியதாக இருக்கும்.

மேலும் அவ்வாறு தோற்றுவிக்கப்படும் இந்த அமைப்பானது சனநாயக முறையில் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், அரசியல் கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தி மக்களை அரசியலில் ஈடுபடச் செய்யவேண்டும்.

ஏனெனில் தற்பொழுது உணர்ச்சி அடிப்படையில் இணைந்து இருக்கும் இம்மக்களுக்கு உண்மையான அரசியல் புரிதல் அல்லது அறிதல் ஏற்படுத்தப்படவேண்டும் அதன் மூலம் மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களையே போராடச் செய்தல் வேண்டும்.

மக்கள் தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தாமே போராடும் பொழுதுதான் இந்த மக்கள் எழுச்சி என்பது உச்ச பயன்பாட்டை அடையும் வாய்ப்புண்டு.

-http://www.tamilwin.com

TAGS: