விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்.. கைவிரித்த மத்திய அரசு: அவசரச் சட்டம் கொண்டு வருகிறார் ஒ.பி.எஸ்? பரபரப்பு தகவல்

pannதமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இப்போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன் காரணமாகவே தமிழக முதல்வரான பன்னீர்செல்வம் நேற்று மத்திய அரசை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து எடுத்து கூறியதாக தகவல்கள் வெளியாகின.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, உடனடியாக தமிழகம் திரும்பும் முடிவில் இருந்தாராம் முதல்வர், பின்னர் கட்சி எம்.பி-களிடம் தனியாக பேசும்போது, பிரதமரிடமிருந்து ஒரு பாசிடிவ் சிக்னல் கிடைத்துள்ளது. அதை தெரிந்துகொண்ட பிறகு தான் சென்னை கிளம்பலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னாராம்.

இதன் காரணமாக முதல்வர் சென்னை திரும்புவது தாமதமாகியுள்ளது. அ.தி.மு.க எம்.பி-களை கிளம்பச் சொல்லிவிட்டு, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்வருடன் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சற்று கெடுபிடியாக இருக்கிறது. அதையே சுட்டிக்காட்டி மத்திய அரசும் கைவிரித்துவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு தரப்பிலிருந்து ஏதாவது அவசர நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆதரவு போராட்டங்கள் ஓயும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தபடியே, சென்னை தலைமைச் செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதற்கான சில நடவடிக்கைகளை டெல்லியில் இருந்தபடியே செய்துமுடிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,சட்டசபையை கூட்டி அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் சிறப்பு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்ததாகவும், இந்த கருத்தை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஊடகங்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டதால், அவர் சொல்லி இதை அரசு செய்ததாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்த யோசனையை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து, அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாமா என்று ஆலோசனை நடந்ததாகவும், அதுவும் வேண்டாம் என்று பிறகு கைவிடப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தில் நடத்தலாம் என்று தமிழக அரசு தரப்பில் அவசரச் சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசனை தற்போது நடந்து வருகிறது என்றும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டாலே போதும். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புவது சம்பிரதாயம் தான் எனவும் அந்த சம்பிரதாயத்திற்காகத்தான், முதல்வர் டெல்லியில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: