தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் சரியாக செயற்படவில்லை என்றால் மக்கள் அவர்களை வழிநடத்துவார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.
தொடர்ந்து தமிழகத்தில் நிலவிவந்த அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் பண்பாட்டின் மீது கைவைத்தவர்களின் துணிகரத்தையும், எதிர்த்து தமிழிகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் இத்தனை லட்சக்கணக்கில் திரண்டு இருப்பது இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.
மூன்றாண்டுகளாக அலங்கா நல்லூர் மக்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிவந்திருந்தனர். தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடிப் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
ஆனால், யாரும் இவ்வளவு தூரம் ஒரு போராட்டம் கருக்கட்டும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
தமிழகத்தில் ஒருவார காலமாக தொடர் போராட்டத்தால் திகைத்து நிற்கிறது மத்திய அரசு.
இது எதனால் வந்த விளைவு? நீண்ட காலமாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மெத்தனப்போக்கில் செயற்பட்டனர். எனினும் முன்னர் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றங்களை இது விடையத்தில் நாடியிருந்தார்.
ஆனாலும், எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டிற்கு தடை மட்டும் கிடைத்தது. இருப்பினும் அப்போதைய காலகட்டத்தில் ஒரு தீர்மான கரமான அரசியல் தலைமைகள் இருப்பதாக மக்கள் உணர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு, முதலமைச்சர் பதவில் இருந்தபடியே மரணமடைந்தார். தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சி நிலையில் தளம்பல் ஏற்பட்டிருந்தது.
மக்கள் விரக்தி அடைந்தனர். எனினும், அதற்கான எதிர்ப்பை காட்டவேண்டிய இடமும், சூழலும் சரியாக அமைந்திருக்கவில்லை.
இந்நிலையில் தான். தமது பாரம்பரியத்தின் மீது மத்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கைவைக்கும் பொழுது அதற்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசு இருப்பதைக்கண்டு தமிழ் மக்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செயற்படுவது தான் அதன் கடமை. எனினும் தமிழக அரசாங்கம் தங்கள் சுய பிரச்சினைகளையும், பதவி, அதிகாரச் சிக்கல்களிலும் முரண்பட்டுக் கொண்டிருக்கையில் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பலத்தைக் காட்ட களத்திற்கு இறங்கினர்.
செயலற்று இருந்தவர்களை செயற்பட வைத்திருக்கிறார்கள் மாணவர்கள். இன்று மாநில அரசாங்கம் மட்டுமல்ல, மத்திய அரசாங்கமும் தமிழக இளைஞர்கள், மாணவர்களின் பலம் கண்டு கதிகலங்கியிருக்கிறார்கள்.
தொடர்ந்து ஒரு வாரமாக தங்கள் போராட்டத்தை நேர்த்தியாக தொடர்கின்றார்கள். எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு.
ஆக, இன்று ஒட்டுமொத்த மாணவப்படையும் தம் எதிர்கால இருப்பை தீர்மானிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களின் இந்த எழுச்சி அடுத்த தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும்.
இனித் தமிழகம் மெல்லம் தலையெடுக்கும். நல்ல தலைவர்களின் வருகையோடு.
-http://www.tamilwin.com