அறப்போராட்டத்தை தடியடியாக்கி அரசியல் செய்தது யார்?

save jallikattuமெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.

கடந்த 6 நாட்களாக அறவழியில் நீடித்து வந்த போராட்டத்தை இன்று (23.01.2017) முடித்துக் கொள்ளுமாறு போராட்டக் களத்தில் இருந்தவர்களை போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

போலீசார் ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுமாறு அறிவிப்பு வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆனால், கடந்த 6 நாட்களாக தாங்கள் நடத்திய போராட்டத்துக்கு பதில் கிடைக்க வேண்டும் என்று கூறி, போராட்டக்காரர்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.

போலீஸார் செய்தது சரியா?

போராட்டத்தை கைவிட மக்கள் மறுத்ததை அடுத்து, போலீஸார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் காலை 7 மணியில் இருந்தே போலீஸார் மெதுவாக போராட்ட‌த்தில் இருந்த மக்களை நோக்கி வந்துள்ளனர்.

மக்களிடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும், அதனால் நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

மக்களுக்கு போலீஸார் கூறியதில் நம்பிக்கை இல்லாததால், யாரும் அந்த இடத்தை விட்டு போகாமல் அங்கேயே உட்கார்ந்து இருந்தனர்.

காவலர்களின் தொடர் பேச்சால் மக்களும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அவகாசம் தருமாறு போலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்களுக்கு ஆதரவு தெரிவித்தவாறே அவர்களை நோக்கி சென்ற போலீஸார், போராட்டக்காரர்களை சுற்றி வளைத்தனர்.

அங்கு வந்திருந்த அனைத்து போலீஸாரும் மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

அந்த முயற்சியில் பலரை தாக்கியும் உள்ளனர். மக்களை அடித்தும், காலால் மிதித்தும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த தாக்குதலில் பெண்கள், முதியோர் என்றும் பார்க்காமல் லத்தியால் அடித்து வெளியேற்றியுள்ளனர்.

இன்று மெரினாவில் இருப்பது யார்?

tadiyadiஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி மெரினாவில் போராட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர்கள் மாணவர்கள்தான்.

போராட்டத்துக்கு வந்தவர்களை பார்த்த மற்ற மாணவர்களும், பெண்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக களத்தில் இறங்கினர். கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மக்கள் தங்கள் குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் போராட்டக்களத்திற்கு வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மெரினாவைப் போராட்டக்களமாக பார்க்க முடியாத அளவுக்கு, மக்களிடையே அன்பும், பாசமும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் கொண்ட மனிதர்களை கடந்த 6 நாட்களாக, அங்கு பார்க்க நேர்ந்தது.

அது ஒரு திருவிழாவுக்குச் சென்றது போன்ற உணர்வை மட்டுமே தந்தது. ஒரு போரட்டத்தை இப்படியும் அமைதியாய் நடத்த முடியும் என்று கற்றுக் கொடுத்தார்கள் நம் இளைஞர்கள்.

தங்களுக்கு தேவையானதை வன்முறையின்றி, தலைமையை எதிர்பார்க்காமல் அமைதி காத்து பெற முடியும் என்று, மற்ற மாநிலங்களும் கற்றுக் கொள்ளும் அளவுக்கு இருந்தது அவர்களின் போராட்டம்.

ஆறு நாட்களாக அறவழியில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களும், இளைஞர்களும் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்வது நம்பத்தகுந்த விஷயமாக இல்லை.

அப்படி அவர்கள் வன்முறையை கையில் எடுக்க நினைத்திருந்தால் முதல் நாளே செய்திருப்பார்கள். இத்தனை நாள் காத்திருக்கத் தேவையில்லை.

போராட நினைத்த மக்கள் அனைவரும் அமைதியான முறையில், மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல்தான் போராட்டத்தைத் தொடந்தனர்.

சாலைகளில் ஏற்பட்ட நெரிசலைக் கூட தன்னார்வலர்கள் சரி செய்து கொண்டிருந்தார்கள். அப்படி இருக்கும்போது, போராட்டத்துக்கு வந்த இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு குறைவுதான்.

அப்படி இருக்கும் சூழலில், போலீஸாரை தாக்க முயற்சித்தது யாராக இருக்கும்? இவர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் இதர தேசிய கட்சிகளைச் தனித்தனி குழுக்களாக விரிந்து இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

தேவையில்லாத பிரச்னைகளை ஜல்லிக்கட்டு போராட்டத்துடன் இணைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

போராட்டக்காரர்களிடம் இருந்து தனித்தும், தகாத வார்த்தைகளால் பலரையும் விமர்சித்தும் வந்திருக்கிறார்கள். இவர்கள் போனவாரம் கூடிய கூட்டம் இல்லை என்பதை, அங்குள்ளவர்களே உணர்ந்துள்ளனர்.

இந்த புல்லுருவிகள் தான் இந்தக் கூட்டத்தை கலைத்தது. இவர்கள் ஏவப்பட்ட அம்புகள்தான், அவர்களை ஏவி விட்டவர்கள் யார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

எரிக்கப்பட்ட வாகனங்கள்அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் பல தவறான தகவல்களை பரப்பி வந்தனர்.

தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றுதான், முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்கச் சென்றார். அங்கு முடிந்தவரை பேசி, அவசர சட்டம் கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து பலர், முதல்வரின் பேச்சுக்கு மரியாதை அளிக்கும் விதமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இன்னும் சிலர் ஞாயிற்றுக்கிழமை இரவே தங்களின் பணிகளைப் பார்க்க சென்று விட்டனர். பலரின் கோரிக்கையும், வேண்டுகோளையும் கேட்டு மக்கள், தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர்.

ஆனால், அரசின் பேச்சுக்கும், போலீஸாரின் அறிவிப்புக்கும் பணியாமல் இருந்த கூட்டம், நிச்சயம் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்த இளைஞர்களாக இருக்க வாய்ப்பில்லை.

யார் யாருக்காகவோ இந்தக் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது? இவர்களின் குறிக்கோள்தான் என்ன? சட்டம் பிறப்பித்த பிறகும் இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்..?

திடீரென காவல்நிலையம் எரிக்கப்படுகிறது, மக்கள் தாக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்தை எரித்தது போராட்டக்காரார்கள் அல்ல என்று போலீஸே சொல்கிறது என்றால், இதன் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால் மாணவர்கள் பெயர் வாங்கி விடுவார்கள். பிறகு எல்லா விஷயத்துக்கும் தெருவில் இறங்கி விடுவார்கள்.

நாளை எளிதாக ரோட்டில் இறங்கி ஆட்சியைக் கூட கலைப்பார்கள் என்ற பயமா? இனி அரசியல்வாதிகளும், கட்சிகளும் தலைகுனிய வேண்டும்; மாணவர்கள் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணமா? என மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வந்திருந்த மக்களுக்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த போலீஸார் இன்று தடியடி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்று வரை அமைதியாய் இருந்த போலீஸாரை தூண்டியது யார்? அவர்கள் பொது மக்களையும், போராட்டத்தை முடிக்காமல் இருக்கும் கூட்டத்தையும் வேறுபாடு இன்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் மற்றும் போராட்டத்துக்கு வந்த இளைஞர்கள் தவிர, சமுதாயத்துக்கு எதிரான ஒரு கூட்டமும் போராட்டத்தில் ஊடுருவி இருந்திருக்கிறது.

போராட்டம் தொடர்ந்து வந்த வரைக்கும் அவர்களுக்கு அது சாதகமாக இருந்தது. ஆனால், போராட்டத்தை கைவிடத் தொடங்கும் சமயத்தில் அவர்களால் முடிந்த செயல்களைச் செய்யத் தொடங்கினர்.

அந்த செயல்கள் அறவழி போராட்டத்தில் இருந்த மக்களின் முயற்சியையும், உழைப்பையும் வீணாக்கி விட்டது.

போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தீய சக்திகளின் செயல்கள் பல இளைஞர்களின் வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது.

இளைஞர்களிடம் இருந்து வந்த ஒற்றுமை தொடர்ந்தும், தங்களை வைத்து மற்றவர்கள் செய்யும் அரசியலைப் புரிந்தும் நடந்து கொண்டால், அவர்களின் போராட்டத்துக்கு ஒரு நல்ல முடிவு அமையும்.

அடுத்து வரும் தலைமுறையினரும் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள அது உந்துகோலாக அமையும்.

யாரையும் நம்பாமல் வீதிக்கு வா தோழா இன்னொரு போராட்டத்தில் சந்திக்கலாம் என்ற மன நிலையில் தான் உண்மையான போராளிகள் வெளியேறினர்.

– Vikatan

TAGS: