மிருக வதை தடுப்பு சட்டத்திலிருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு.. தடை நீங்கியது.. முதல்வர் ஓபிஎஸ்

panneerselvamசென்னை: தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த சட்டத்தின் மூலம் மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியுள்ளது என்றார். தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் இன்று மாலை கூடியது. இதில் தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

காங்கிரஸ் ஆட்சியில் காளை சேர்ப்பு

“திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதையடுத்து, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

கையெழுத்து இல்லாததால் ரத்து

இதனால், ஜல்லிக்கட்டு நடத்தமுடியாமல் தடைப்பட்டது. கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்தில் குடியரசு தலைவரின் கையெழுத்து இல்லாததால் அந்த அவசரச்சட்டம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் உறுதியளித்தார்

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தடையை விலக்கக் கோரி பிரதமரை நான் சந்தித்த போது, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் மத்திய அரசு தலையிட முடியாது. அதேசமயம், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்தார்.

மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்

அதன்படி, மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி மிருக வதை தடுப்பு சட்டத்திலிருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மத்திய அரசாலும் கொண்டு வர முடியும், மாநிலம் அரசு கொண்டு வர முடியும்.

குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அவசரச்சட்டம்

மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதனால், மத்திய அமைச்சகங்களின் அனுமதி பெற்று குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

சட்டமாக நிறைவேற்றம்

இது இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கி உள்ளது.இந்த சட்டம் கவர்னரின் ஒப்புதலுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்”. இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசினார்.

tamil.oneindia.com

TAGS: