ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்கிறது விலங்குகள் நல வாரியம்.. அப்போ சிவசேனாதிபதி சொன்னது பொய்யா?

karthikeya-sivasenapathyடெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியான அறிவிக்கைகளை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இவை மனு தாக்கல் செய்துள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, விலங்குகள் நல வாரியம் என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு மத்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக தமிழக அரசின் சட்டத்தை எதிர்க்கிறது.

பிரதமர் மோடியே தமிழர் கலாசாரத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று அறிவித்துவிட்ட நிலையிலும், அரசின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு தமிழக விருப்பத்திற்கு மாறாக முறையீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

இரட்டை நிலை

ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் விலங்குகள் நல வாரியம் இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிய பின்னணியில் இந்த நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது. அல்லது மத்திய அரசு தொட்டிலை ஆட்டிவிட்டுவிட்டு, பிள்ளையை இப்போது கிள்ளிவிட்டதா என்ற சந்தேகமும் ஏற்படாமல் இல்லை.

எதிர்ப்பு தெரிவிக்காது

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பேட்டியளித்தனர்.அப்போது கார்த்திகேய சிவசேனாதிபதி கூறுகையில், விலங்குகள் நல வாரிய தலைவரை ஒரு வாரத்திற்கு முன்பே மாற்றி விட்டார்கள். எனவே இனிமேல் ஜல்லிக்கட்டு தொடர்பாக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவிக்காது. இனிமேல் பிரச்சினை இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார்.

தடியடி

இருப்பினும் போராட்டக்காரர்கள் அந்த பேச்சை நம்பி கலைந்து செல்ல மறுத்தனர். இதற்கு மறுநாள் போலீசார் திடீரென மெரினாவிலும் பிற இடங்களிலும் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். ஆனால், அவரது பேட்டிக்கு நேர் எதிர்மாறாக, போராட்டக்காரர்கள் சந்தேகப்பட்டபடியே இப்போது விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. அறிவிக்கை வழக்கிலாவது ஏற்கனவே விலங்குகள் நல வாரியம் ஒரு அங்கம் என்பதால் அதை எதிர்ப்பதில் லாஜிக் உள்ளது. ஆனால் தமிழக அரசின் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பது ஏன் என்பது பெரும் கேள்வி.

தெளிவுபடுத்த வேண்டும்

கார்த்திகேய சிவசேனாதிபதி போராட்டத்தை கலைக்க கூறிய பசப்பு வார்த்தைகள் இப்போது பலிக்கவில்லை. அவரிடம் அதுபோன்ற ஒரு உறுதியை தெரிவித்து பேட்டியளிக்க கூறியது யார்? அதன் நோக்கம் என்ன என்பதை கார்த்திகேய சிவசேனாதிபதிதான் தெளிவுபடுத்த வேண்டும்.

tamil.oneindia.com

TAGS: