நாட்டு நாய்களுக்கு கூடுது ‛மவுசு’; பாதுகாப்பு படையில் சேர்க்க முயற்சி

naaddu naaiராய்பூர்: தமிழ்நாட்டில் நாட்டு மாட்டினங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்திய நிலையில் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முகாம்களில் இந்திய நாட்டின நாய்களுக்கான மவுசு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

காயம்:

சட்டிஸ்கர் மாநிலம் கொண்டகன் பாஸ்டர்ஸ் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப்., 188 வது ராணுவ பட்டாலியன் முகாமில் நக்சல்கள் ஊடுருவியுள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்த பெல்ஜியம் ஷெப்பேர்டு, ஜெர்மன் ஷெப்பேர்டு இனங்களை சேர்ந்த 2 நாய்கள் பயிற்சியளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் சமீபத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., முகாமில் இருந்த இந்த 2 நாய்களும் காயமடைந்தன. இதனால் தேடுதல் வேட்டைகளுக்கு நாய்கள் இல்லாமல் இருந்தது.

பயிற்சியில் நாட்டு நாய்கள்:

இதையடுத்து அந்த முகாமில் இருந்த நாய் பயிற்சியாளர்கள், கோலு மற்றும் ராக்கி என பெயரிடப்பட்ட 2 நாட்டு இன நாய்களுக்கு பயிற்சியளிக்க துவங்கினர். பயிற்சியின் துவக்கத்திலேயே நல்ல ஒத்துழைப்பை தந்த இரு நாட்டு நாய்களும், பயிற்சி முடிவடையும் கட்டத்தில் வெளிநாட்டின நாய்களை காட்டிலும் சிறப்பாக செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முன்னேற்றம்:

இது குறித்து நாய் பயிற்சியாளர் நரசிங்குமார் கூறும்போது, ‛’ வெளிநாட்டின நாய்களை காட்டிலும் இந்திய நாட்டின நாய்களை பழக்குவது சற்று சிரமம். இந்திய நாய்களுக்கு மோப்ப திறனும் சற்று குறைவாகதான் இருக்கும். ஆனால் பயிற்சிக்கு பிறகு அதன் செயல்பாடுகளில் அதீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பயிற்சி:

பயிற்சி பெற்ற நாட்டின நாய்கள் தற்போது காண்காணிப்பிலேயே இருக்கிறது. அவற்றை தற்போது களத்தில் இறக்கும் முடிவு இல்லை. எனினும் அவசர தேவைக்காக எந்த நேரமும் களத்தில் இறங்க தயாராகவே வைக்கப்பட்டுள்ளது. கோலு மற்றும் ராக்கிக்கு வெடிகுண்டுகளை அப்புறப்படுத்த சரியான பயற்சியை அளித்து வருகிறோம். அவை முறையாக திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் பாதுகாப்பு படையில் இந்திய நாட்டின நாய்களை சேர்க்க முன்னுதாரணமாக இருக்கும்.

ஆர்வம்:

தற்போது இவற்றின் செயல்படுகளை பார்த்த பல முகாம் அதிகாரிகள் தங்கள் முகாம்களிலும் இந்த முயற்சியை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படைகளில் இந்திய நாட்டின நாய்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. ”என கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: