பண மதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணம் ஒழியவில்லை: ப. சிதம்பரம்

pcமத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை என மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பண மதிப்பு நீக்கம் – மக்கள் படும் வேதனை என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் பேசியது:

பண மதிப்பு நீக்கத்தால் 132 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனி மனிதர் நாட்டின் மீது இப்பாதிப்பைத் திணித்துள்ளார். இந்த முடிவை மோடி எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அரசியல் சட்டத்தின்படி அவருக்கு இந்த அதிகாரம் கிடையாது. இது முழுவதும் சர்வாதிகாரப் போக்கு. இதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உலகிலேயே ஜிம்பாப்வே, லிபியா, வடகொரியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டன. இப்போது, இந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதுபோல, வேறெந்த நாடும் செய்ததில்லை.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், கள்ள நோட்டை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்குக் கள்ள நோட்டுகள் கரன்சிகளாக போய் சேருவதை ஒழிப்பதற்காகவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். இந்த நோக்கங்கள் நல்லவை. இதைக் குறை கூற முடியாது.

ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் இந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியாது. எனவே, பண மதிப்பு நீக்கத்தால் கருப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை. ஊழலும் ஒழியவில்லை. பண மதிப்பு நீக்கத்தால் பல கோடி மக்கள் துன்பப்பட்டனர். அனைத்து சந்தைகளும், தொழில் கூடங்களும் மூடப்பட்டன.

400 கோடி கள்ள நோட்டுகளை ஒழிக்க 15.44 லட்சம் கோடி நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வது என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றது. இதன் விளைவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாத பட்ஜெட்டாக உள்ளது.

வளர்ந்த நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியாவில் தலா 80 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும், கனடாவில் 54 சதவீதமும் பண பரிவர்த்தனையே மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் பணமே இல்லாமல் எப்படி பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாகும் என்றார் சிதம்பரம்.

கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் எஸ். பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கார்த்திக் ப. சிதம்பரம், மாவட்டத் தலைவர்கள் பி.ஜி. ராஜேந்திரன் (மாநகரம்), து. கிருஷ்ணசாமி வாண்டையார் (தெற்கு), டி.ஆர். லோகநாதன் (வடக்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-http://www.dinamani.com

TAGS: