முதல்வர் கனவு சசிகலாவுக்கு பேரிடி- சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு!

sasikala456டெல்லி: முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒருவாரத்தில் வழங்க இருக்கிறது உச்சநீதிமன்றம்.

1991-96-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். ஆனால் ஜெயலலிதா, சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்தார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்பை நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஒத்திவைத்துள்ளது.

சசிகலா தேர்வு

இதனிடையே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கபளீகரம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துள்ளார் சசிகலா. அத்துடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலாவே சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல்வராகிறார்

தற்போது தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலா தயாராகிவருகிறார். ஓரிருநாட்களில் அவர் முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளார்.

தீர்ப்பு வருது…

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தகவல் சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: