முதல்வர் பதவிக்காக ஓபிஎஸ்- சசிகலா மல்லுக்கட்டு: ஆளுநர் எடுக்கப் போகும் முடிவு என்ன? பரபர தமிழகம்

ops7சென்னை: முதல்வர் பதவி விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று சென்னை வருகிறார். இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதற்காக தமிழகமே பெரும் எதிர்பார்ப்பில் காத்து கிடக்கிறது.

முதல்வர் பதவியைக் கபளீகரம் செய்வதற்காக ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கினார் சசிகலா. இதில் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அதிமுகவின் 5 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களை சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி பேருந்துகளில் ஏற்றி ஹோட்டல்களில் சிறை வைத்துள்ளது.

சசிகலா சந்திக்கிறார்

இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வருகிறார். அவரை எம்.எல்.ஏக்களுடன் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோர இருக்கிறார்.

ஓபிஎஸ்

அதேநேரத்தில் தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் ஓபிஎஸ்-ம் ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளார். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கும்? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு

காத்திருக்க அறிவுறுத்தலாம்

தற்போதைய நிலையில் ஆளுநர் வித்யாசகர் ராவ் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது? என்பதை பார்ப்போம். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தம்மை சந்தித்து ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை பதவியேற்பை ஒத்திவைக்கலாம் என ஆளுநர் கூற வாய்ப்புள்ளது. அதுவரை காபந்து முதல்வராக ஓபிஎஸ் நீடிக்கவும் உத்தரவிடலாம்.

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

ஏனென்றால் உச்சநீதிமன்றம் சசிகலா குற்றவாளி என்ற தீர்ப்பை உறுதி செய்தால் மீண்டும் அரசியல் சாசன நெருக்கடி வரும். இதனை சுட்டிக்காட்டி காத்திருக்குமாறு சசிகலாவுக்கு ஆளுநர் அறிவுறுத்தலாம்.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம்

மேலும் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன்; தமக்கு 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் முறையிடலாம்; அப்போது 60 எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்குமாறு முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் உத்தரவிடலாம். திமுக வெளியில் இருந்து ஆதரவு தர ஓபிஎஸ் பெரும்பான்மையை நிரூபித்தால் மைனாரிட்டி அரசாக தொடர வாய்ப்புண்டு.

சட்டசபை முடக்கம்?

அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை சுட்டிக்காட்டி சட்டசபையை 6 மாத காலம் முடக்கி வைத்து ஜனாதிபதி ஆட்சிக்கும் ஆளுநர் பரிந்துரைக்கலாம். தற்போதைய நிலையில் ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

-oneindia.com

TAGS: