ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் இப்படி அசாதாரணமாகத் தாமதிப்பது நியாயமா?

vidya sagar raoஆளுநர் தாமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளுநரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, அவர் நடைபெற்ற அனைத்துவிதமான நிகழ்வுகளையும் அலசி ஆராயவேண்டிய காரணம் உள்ளது. அதில் ஒருசில காரணங்களை நாமாக அலசலாம்…

அலசல் 1

தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் பார்க்க வந்தபோது பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஜெ அவர்களின் உண்மையான நிலை என்னவென்று அறிய முடியாமல் கண்ணாடியோடு நிறுத்தப்பட்டதும், நலமாகத்தான் இருக்கிறார் என்று பேட்டிகொடுக்க வைக்கப்பட்டார்.

அன்றைய சூழலில் மக்கள் அசாதாரண நிகழ்வுகளை எதிர்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் பேட்டியும் அளித்திருக்கலாம். ஆனால், இன்று நடைபெறும் நிகழ்வுகள் ஜெ அவர்களுக்கு நிகழ்ந்தது இயற்கையான மரணம்தானா? என்ற சந்தேகம் வலுப்பெற்றிருக்கும்.

போதாக்குறைக்கு ஓபிஎஸ் அதை உறுதிப்படுத்தும்விதமாக ஜெவின் மரணத்தை விசாரணைக்கு உட்படுத்துவோம் எனப் பேசியிருப்பது அவரது சந்தேகத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கும்.

அலசல் 2

சசிகலா அவர்களின் அடுத்தடுத்த அவசர முடிவுகள் அவரை இன்னும் அழுத்தமான சந்தேகப் பார்வைக்கு தள்ளியிருக்கலாம். உடனடியாக பொதுச்செயலாளரானதும், முதல்வர் பதவியை நோக்கி வேகமெடுத்ததும் பதவியையோ பணத்தையோ பாதுகாக்க அல்ல. முதல்வரானால்தான் ஜெவின் மரணத்திலிருக்கும் மர்மங்களை நீர்த்துப்போகச் செய்ய முடியும்.

மற்றொருவர் முதல்வராக இருந்தால் அது நடைபெறாது. என்ற கோணத்தில் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

அலசல் 3

எம் எல் ஏக்கள் உண்மையாக சசிகலா அவர்களுக்கு ஆதரவு தருவதாக இருந்தால் அவர்கள் சுதந்திரமாக விடப்பட்டிருக்கலாம். கூவாத்தூரில் நடைபெறும் கண்துடைப்புப் பேட்டிகளை மீடியாக்காரர்கள் வேண்டுமானால் அப்படியே நம்பலாம்.

உண்மையான காரணத்தை ஆளுநருமா நம்ப வேண்டும். அரசு இயந்திரம் என்பது மேம்போக்கான தனிமனிதர்களின் பார்வைக்கோ கருத்துக்கோ இடமளிக்காது. அடைத்தோ, தங்களுக்காக பாதுகாப்பாகவோ ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களை மட்டுமே தனக்கான தாமதத்திற்கு காரணமாக்கியிருக்கலாம்.

அலசல் 4

ஒவ்வொரு எம் எல் ஏக்களாக பிரிந்து வருவதையும், அவர்கள் மேலும் வெளியே வரக்கூடும். அல்லது ஒவ்வொரு எம் எல் ஏக்களின் முழு மனதான முடிவுகளும் அவர்களைத்தான் ஆதரிக்கிறதா? என்று தெரிந்துகொள்ள கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம்.

அலசல் 5

பொறுப்பு முதல்வர் என்பவர் தன்னால் ஏற்படுத்தப்பட்டவர். ஆளுநர் தனக்குப் பதிலாக ஆள நியமிக்கப்பட்டவர். அவரின் வார்த்தைகளையும் ஆதாரங்களையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிடமுடியாது. அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தறிய வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

அலசல் 6

சசிகலா அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை தேர்தல் ஆணையத்தால் ஏற்க முடியாததும், அஇஅதிமுகவின் விதிகள் மீறப்பட்டிருப்பதும் அதன் சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடைபெறாததையும் கணக்கில்கொள்ள வேண்டியது ஆளுநரின் கடமை.

அலசல் 7

மொத்தத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர். அடுத்து ஆறுமாதத்திற்குள் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அதற்கு மக்களின் அன்பை ஒரு சதவீதமாவது பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத போது மீண்டும் வேறு ஒரு முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். சசிகலா அவர்களைப் பொருத்தவரையில் எம் எல் ஏக்களைத் தவிர கட்சியினரின் அன்பைக்கூட சம்பாதிக்காத இடத்திலிருப்பது.

அலசல் 8

சசிகலாவின் மீது இருக்கும் வழக்குகள். அதன் தீர்ப்பு சமீபித்திருக்கும்போது முதல்வராக பதவியிலிருந்தால் தீர்ப்பின் சாதக பாதகங்கள் எப்படி அமையக்கூடும் என்ற சட்ட ரீதியான விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கான நேரத்தை அவர் எடுத்துக்கொண்டிருக்கலாம்.

அலசல் 9

ஜெக்கு உரிய சொத்துக்களை தானாகவே எடுத்துக்கொண்டு உரிமைகொண்டாடுவதும்.. அரசாங்க ஊழியர்களை அடிபணியச் சொல்லி மிரட்டுவதும் ஆளுநரின் காதை எட்டியிருப்பதும். ஆளுநர் தனக்கான தாமதத்திற்கு காரணங்களாக வைத்திருக்கலாம். இதையெல்லாம் அதை அவர் ஒவ்வொருவருக்கும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது அவர் செய்ய வேண்டியதெல்லாம்…

எம் எல் ஏக்களை தனித்தனியாக யாரும் உடன் வராமல் சந்தித்து அவர்களின் உண்மையான விருப்பத்தையும், கருத்தையும் அறிவது. இதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் சுதந்திரமாக இருக்க வேண்டிய எம் எல் ஏக்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்போதே தெரியவில்லையா? அவர்கள் தங்கள் விருப்பத்திற்கெதிராகவே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது. அப்படிப்பட்டவர்களின் கருத்தை எவ்வித மிரட்டலும் இல்லாத சூழலில் அறிய வேண்டியது அவசியம். இதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளமாக அமையக்கூடும்.

அப்படியில்லையேல் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்கச் செய்வதுதான் அடுத்த முடிவாக இருக்க வேண்டும். அங்கு அவர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும் தாராளமாக ஆட்சியமைக்க அழைக்கலாம்.

இதற்கு மேலும் சட்ட ரீதியாகவே செல்ல வேண்டுமென்றால் மிரட்டி வாங்கப்பட்ட அல்லது ஒப்புதலோடு வாங்கப்பட்ட கடிதங்களை அடிப்படையாக வைத்து முடிவெடுக்க வேண்டியதுதான். வேறுவழியே இல்லை! – ஆர்ஜி

tamil.oneindia.com

TAGS: