சென்னை, ஆளுநர் மாளிகையில் பெருமளவில் பொலிஸார் குவிப்பு!

vk-sasikalaசென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட முக்கிய இடங்களில் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று காலை ஆளுநருக்கு அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தனது தலைமையில் ஆட்சியமைக்க, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரைச் சந்திக்க இன்று நேரம் ஒதுக்குமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதன்பிறகு, சென்னை புறநகரில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்குப் புறப்பட்டுச் சென்ற சசிகலா, அங்கு அவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நேராக ஆளுநர் மாளிகைக்கு வரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

ஆளுநர் இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்காத நிலையில், தன்னிச்சையாக சசிகலா தனது ஆதரவாளர்களுடன் வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், ஆளுநர் மாளிகை முன்பு பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்ததாக, மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

அதற்கு எந்த முகாந்திரமும் இல்லாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கும் பெருமளவில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடற்கரையில் யாராவது அணி திரள்கிறார்களா என்று கண்காணித்து வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைகுறிப்பாக, கூவத்தூர் செல்லும் முன்பு போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் அமைதி காக்கிறோம். ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும், அதற்கு மேல் நாம் செய்ய வேண்டியதை செய்வோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுக்கு, முதல்வர் பன்னீர் செல்வம் அணியினர் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் பேச்சை, மத்திய அரசும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் ஓர் எச்சரிக்கையாக காவல் துறை கவனித்து வருகிறது.இதற்கிடையில், சென்னையில் தங்கும் விடுதிகளில் யார் யார் தங்கியிருக்கிறார்கள், அவர்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை, காவல் துறை ஆணையரின் உத்தரவின்பேரில் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

தலைமைச் செயலர், தமிழக காவல் துறைத் தலைவர் உள்ளிட்டோருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கெனவே, சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது

– BBC – Tamil

TAGS: