சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசன், சுதாகரன், ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. இது தமிழ்நாட்டின் தலையெழுத்தையை மாற்றும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
சென்னையில் முக்கியமான 20 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமைச் செயலகம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.