ஊழல் கொடூரமானது… சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாட்டையடி

sasikala-caseசென்னை: 21 ஆண்டுகாலம் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், நீதிபதி அமித்வா ராய் ஆகியோர் அடங்கி அமர்வு அளித்தது.

இந்த விசாரணையில், மற்றொரு நீதிபதியான அமித்வா ராய், முதல் நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில், கூடுதலாக தன்னுடைய கருத்தையும் கூடுதல் தீர்ப்பு வடிவில் சுருக்கமாக 6 பக்கங்களில் வெளியிட்டார். நீதிபதி அமித்வா ராய் தன்னுடைய கூடுதல் தீர்ப்பில் ஊழலைப் பற்றி கடுமையான கருத்துக்களை முன்வைத்தார்.

மனதளவில் அமைதியைக் குலைக்கும் ஒருசில சிந்தனைகள் மனதில் கிளர்ந்ததால் அக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கூடுதல் தீர்ப்பை பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

சொத்து குவிக்க சதி

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடங்கிய 34 நிறுவனங்களில் பெரும்பாலானவை பெயர் அளவிலான நிறுவனங்கள் ஆகும். சட்டத்தை ஏமாற்றி, கணக்கில் காட்டாத வருவாயை நியாயப்படுத்தவே இவை தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பெரிய அளவில் சொத்து குவிப்பதற்கு ஆழமான சதி நடந்து இருப்பது தெளிவாகிறது.

மக்களுக்கு துரோகம்

சமுதாயத்துக்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள், தங்களின் நலனுக்காக செயல்படுவது, அவர்கள் மீது சமுதாயம் வைத்த நம்பிக்கையை கெடுப்பது மட்டுமின்றி, அரசியல் சட்டப்படி அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கும் துரோகம் விளைவிப்பதாகும்.

ஊழல் கொடூரமானது

சமூகத்தில் ஊழல் கொடூரமானது. இது சமூகத்தை அரித்து அழிக்கும் நோயைப் போன்றது. பல கொடூரமான கரங்களைக் கொண்ட ஊழலின் அனைத்து வகைகளும் சமுதாயத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

இயக்கமாக உருவாக்குவோம்

நம் சுதந்திர இந்தியாவை உருவாக்கிய முன்னோர்களின் தன்னலமற்ற, கணக்கற்ற தியாகங்களை மதிக்கும் வகையில் இதனை நாம் ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

tamil.oneindia.com

TAGS: